மதுரையில் வாடிக்கையாளர் ஒருவர் இன்று (செப்டம்பர் 21) வாங்கிய பால் பாக்கெட்டில் ஈ ஒன்று இறந்த நிலையில் மிதந்து கிடந்தது.
தமிழகம் முழுவதும் ஆவின் பாலகம் வாயிலாகத் தினசரி பால், தயிர், நெய், இனிப்பு வகைகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மற்ற பால் நிறுவனங்களின் பால் விலையை விட ஆவின் குறைந்த விலைக்குக் கொடுப்பதால் ஏராளமான மக்கள் ஆவின் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் நாகமலை பல்கலை அருகே ஆவின் டெப்போவில் இன்று (செப்டம்பர் 21) விற்பனை செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ ஒன்று மிதந்து கிடந்தது.
இதனைக் கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்து பால் பாக்கெட்டை டெப்போவில் திருப்பி கொடுத்து புகார் அளித்துள்ளார்.
இந்த தகவலை அறிந்து மதுரை ஆவின் நிறுவன அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பால் டெப்போவிற்கு சென்று பால் பாக்கெட்டை திரும்பப் பெற்றுச் சென்றனர்.
மேலும், “பால் பாக்கெட்டில் ஈ எப்படி வந்தது என்று தெரியவில்லை. பால் பாக்கெட் பேக்கிங் செய்யும் பொழுது தவறுதலாக ஈ விழுந்திருக்கலாம். இது போன்ற தவறுகள் இனிமேல் நடக்காது” எனவும் ஆவின் அதிகாரிகள் வாடிக்கையாளரிடம் கூறியுள்ளார்கள்.
மேலும், சோதனை நடத்தி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பால் பாக்கெட் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை நடந்து வரும் நிலையில், பால் பாக்கெட்டில் ஈ எப்படி வந்தது என்று தெரியவில்லை என்று அதிகாரிகள் பதிலளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஒரு பால் பாக்கெட்டின் எடை மட்டும் குறைந்திருந்தது.
அதுவும் வாடிக்கையாளருக்கு உடனடியாக மாற்றிக் கொடுக்கப்பட்டதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் இதற்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

ஏற்கனவே, நாள்தோறும் ஆவின் நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாகவும், 2 கோடி அளவிற்கு மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்படுவதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
ஆவின் பால் உரிய எடையில் மக்களுக்குக் கிடைப்பதைத் தமிழக முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
போட்டோஷூட் மூலம் போராட்டம் செய்த மணப்பெண்!
40% கமிஷன்: பாஜக முதல்வருக்கு எதிராக நூதன போராட்டம்!