தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் திட்டத்தின் காப்பீடு தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் காப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மா.சுப்பிரமணியன் பேசும்போது,
“2021 டிசம்பர் 18 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் தான் இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48. இந்த திட்டத்தின் நோக்கம் சாலை விபத்துகளில் உள்ளானவர்களை உடனடியாக மீட்டு காப்பாற்றுவது.
இதற்கு முன்னாள் விபத்துகள் நேர்ந்தால் விபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றுவது அவர்களிடத்தில் பணம் இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு உதவியாக ஆட்கள் இருக்க வேண்டும்.

விபத்து நடந்தால் உதவுவதற்கு ஆட்கள் தயங்குவார்கள். ஆகையால், தமிழ்நாட்டில் அதிகமான விபத்துக்கள் எங்கெல்லாம் ஏற்படுகிறதோ, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்த பகுதிகளை கண்டறிந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின்படி விபத்துகள் நேர்ந்து முதல் 48 மணி நேரத்தில் அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த திட்டம் 2021 டிசம்பர் 18ல் தொடங்கி, இதுவரை கடந்த 3 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவிலான விபத்துகளிலிருந்து மக்களை மீட்டெடுத்திருக்கிறது.
எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் விபத்துக்குள்ளானால் முதல் 48 மணி நேரத்தில் அவரிடத்தில் பணம் இருக்கிறதோ இல்லையோ மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்து அரசின் சார்பில் 1 லட்சம் அவர்களுக்கு அந்த சிகிச்சைக்கு தந்து உடனடியாக அவரின் உயிரைக் காப்பாற்றுவதுதான் இந்த திட்டத்தின் மிக முக்கியமான நோக்கம்.
இந்த திட்டம் தொடங்கியதற்கு பிறகு 3,20,264 பேர் விபத்துகளில் இருந்து மீட்டெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்காக அரசு செலவிட்ட தொகை ரூ. 280 கோடி.
மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கடந்த நிதிநிலை அறிக்கையில் காப்பீட்டு தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் ரூ.2 லட்சத்திற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இன்று முதல் விபத்துக்குள்ளாகும் நபர்களுக்கு அதிகபட்சமாக அரசின் சார்பில் செலவு செய்யப்படும் தொகை ரூ. 2 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியவர்களுக்கு விருதும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சுனாமியில் தப்பித்த ‘பேபி 81’: இப்போது வளர்ந்து விட்டதே!