மதுரையில் வசித்து வந்த எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் இன்று (நவம்பர் 10) காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவரான இந்திரா சௌந்தர்ராஜன் நூற்றுக்கணக்கான நூல்களைப் படைத்தவர். வரலாற்றுக் காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்துச் சுவாரசியமான முறையில் புதினங்களைப் புனைவதில் வல்லவர்.
வெற்றிகரமான பல தொலைக்காட்சித் தொடர்களிலும் இந்திரா சௌந்தர்ராஜன் பங்காற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் பக்தியையும், நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு, தனது படைப்புகளை உண்மைக்கு மிக நெருக்கமாக உருவாக்கி, லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருந்த பெருமைக்குரியவர்.
மிகச் சிறந்த பக்திமானாகத் திகழ்ந்தவர். இந்திரா சௌந்தர்ராஜன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடிகளைச் சேர, வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
துடுப்புகள் இல்லாத படகு… ஆரம்ப சுகாதார நிலையங்களின் அவலங்கள்!
அடுத்த 36 மணி நேரம்…. உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… கனமழை வார்னிங்!