கிச்சன் கீர்த்தனா: பிரெட் பக்கோடா

Published On:

| By Minnambalam

அனைவராலும் தவிர்க்க முடியாத ஒன்று, நொறுக்குத் தீனி. வயது வித்தியாசம் இன்றி, எல்லோருமே ஏதேனும் ஒரு விதத்தில் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சாப்பாட்டை ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடுகிறோம் என்றால், இந்த ஸ்நாக்ஸ் வகைகளை இரண்டு முறையாவது சாப்பிடுகிறோம்.

ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்க ஏதேனும் தீனி தேவை. இதையே ‘எனர்ஜி ரீஃபில்லிங்’ என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். அப்படிப்பட்ட எனர்ஜி உணவுகளில் ஒன்றுதான் இந்த பிரெட் பக்கோடா.

என்ன தேவை?  

சால்ட் பிரெட் – ஒரு சிறிய பாக்கெட்  
வெங்காயம் – ஒன்று  
கடலை மாவு – அரை கப்  
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்  
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்  
ஓமம் – அரை டீஸ்பூன்  
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு  
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெங்காயத்தை விழுதாக அரைக்கவும். பிரெட்டை விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காய விழுது, மிளகாய்த்தூள், உப்பு, ஓமம், சமையல் சோடா சேர்த்து கலந்து பஜ்ஜி மாவுப் பதமாகக் கரைக்கவும். எண்ணெயைக் காயவிட்டு பிரெட் துண்டுகளை மாவில் தோய்த்துப் போட்டுச் சிவக்கப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:  பிரெட் ஓரங்களை நீக்கிவிட்டும் செய்யலாம். நீக்காமலும் செய்யலாம்.

பாசிப்பயறு சுகியன்