தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் நாளை (நவம்பர் 12) அதி கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இலங்கை கடற்கரை பகுதியிலிருந்து தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
கடல் பகுதியில் நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 12 முதல் 24 மணி நேரத்திற்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையிலான கடற்கரை பகுதிகளை நோக்கி நகர்ந்து, நாளை அதிகாலை கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை அதிகாலை நாகப்பட்டினம் மற்றும் அதிராம்பட்டினம் இடையே வேதாரண்யம் பகுதியில் கரையை கடக்கலாம் என்று தெரியவருகிறது.
இதன்காரணமாக, இன்று வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கன மழையும், தமிழகத்தின் ஏனைய கடலோர மாவட்டங்களில் மிக கன மழையும் பெய்யக்கூடும்.

நாளை காலை வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளை ஒட்டியிருக்கக்கூடிய ஒரு சில இடங்களில் மிக கன மழைக்கான வாய்ப்புகளும்,
டெல்டா மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழைக்கான வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செல்வம்