அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் நடத்தப்படும் தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்களை பங்கேற்க அனுப்பாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் தேசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். நீச்சல், கூடைப்பந்து, மல்யுத்தம் உள்ளிட்ட 32 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களை அந்தந்த மாநில அரசுகள் தேர்வு செய்து அனுப்புவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் டெல்லியில் ஜூன் 6-ஆம் தேதி துவங்கி 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள 247 மாணவர்களை அனுப்புமாறு தமிழகத்திற்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு மே 11-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால் தமிழக அரசு சார்பில் மாணவர்களை தேர்வு செய்து அனுப்பாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய அளவிலான விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்காதது குறித்து மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கூறும்போது, “கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தி அகில இந்திய போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
ஜூன் மாத துவக்கத்தில் போட்டிகள் நடைபெறுவதால் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி தேர்வு செய்ய முடியவில்லை. அடுத்த ஆண்டு தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு தமிழ்நாடு சார்பில் மாணவர்கள் அனுப்பப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தேசிய விளையாட்டு போட்டியில் மாணவர்கள் பங்கேற்பதன் மூலம் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 5 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்கும். இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தை பெறும் மாணவர்களுக்கு ரூ.3 லட்சமும், இரண்டாம் இடம் ரூ.2 லட்சமும், மூன்றாம் இடம் பெறும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சமும் அரசு ஊக்கத்தொகையாக வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
டிஜிட்டல் திண்ணை: சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறாரா எடப்பாடி? அதிமுகவில் திடீர் குழப்பம்!
நிதி ஒதுக்கீடு: 5ஜி அலைக்கற்றையுடன் களமிறங்கும் பிஎஸ்என்எல்!