இலங்கையின் ரோந்து கப்பல் மோதி கடலில் மூழ்கிய இந்தியப் படகு!

தமிழகம்

ராமேஸ்வரத்தை சேர்ந்த நாட்டுப் படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகு பலத்த சேதம் அடைந்து கடலில் மூழ்கியது.

ஆனால் இதில், அதிர்ஷ்டவசமாக நான்கு மீனவர்கள் உயிர் தப்பினர்.

ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினம் பகுதியில் மீன்பிடி துறைமுகப் பகுதியில் இருந்து அந்தோணியார் அடிமை என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகு ஒன்றில்,

கில்மன் (வயது 25), சபரி (43), சுவிங்டன் (21), அந்தோணி சிலுவை (60) ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து கப்பல் ஒன்றில் வந்த இலங்கை கடற்படையினர் இந்த நாட்டுப் படகு மீது வேகமாக மோதி உள்ளனர். ரோந்து கப்பல் மோதிய வேகத்தில் படகின் பின்பகுதி பலகைகள் உடைந்து சேதமானது.

இதனால் படகில் கடல் நீர் உள்ளே புகுந்து படகு மூழ்கும் நிலை ஏற்பட்டது. செய்வதறியாமல் திகைத்த மீனவர்கள் உடனடியாக ராமேஸ்வரத்தில் உள்ள மற்ற மீனவர்களுக்கு தங்களை காப்பாற்றுமாறு தகவல் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து ராமேஸ்வரம் துறைமுக பகுதியில் இருந்து நாட்டுப்படகு ஒன்றில் விரைந்து சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகையும்,

அதில் இருந்து நான்கு மீனவர்களையும் உயிருடன் பாதுகாப்பாக மீட்டு ராமேஸ்வரம் துறைமுக கடற்கரைக்கு நேற்று அதிகாலையில் அழைத்து வந்தனர். இதனால் நான்கு மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Indian boat sunk in sea

இந்த அத்துமீறல் குறித்து பேசியுள்ள உயிர் தப்பி வந்த மீனவர் கில்மன், “கச்சத்தீவு அருகே உள்ள இந்திய கடல் பகுதிக்குள் இரவு 12 மணிக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தோம்.

அப்போது திடீரென ரோந்து கப்பல் ஒன்றில் வந்த இலங்கை கடற்படையினர் படகின் மீது வேகமாக மோதினார்கள். மோதிவிட்டு சிறிது தூரம் சென்ற பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக வந்து மீண்டும் படகு மீது வேகமாக மோதினார்கள்.

இந்திய கடல் எல்லைக்குள் தான் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்திய எல்லைக்குள்ளேயே வந்து அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்படையினர் வேண்டும் என்றே தான் படகை மூழ்கடிக்கும் நோக்கில் நடந்துள்ளனர்.

ரோந்து கப்பல் மோதியதில் படகின் பின்பகுதி அதிக சேதம் அடைந்து படகு கடலில் மூழ்க தொடங்கியது,

இதையடுத்து ராமேஸ்வரத்தில் உள்ள எங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் விரைந்து வந்து எங்கள் நான்கு பேரையும் படகுடன் மீட்டு ராமேஸ்வரம் அழைத்து வந்தனர்.

ரோந்து கப்பல் மோதியதில் சேதமான நாட்டுப் படகை சீரமைக்க ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவாகும்” என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

கால்நடை மருந்து: எடப்பாடிக்கு அமைச்சர் பதிலடி!

ஆற்றில் குளித்த இளைஞன் – அடித்து சென்ற முதலை

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *