இந்தியா டுடே சர்வே: முதலிடத்தில் தமிழ்நாடு

Published On:

| By Prakash

’இந்தியா டுடே’ ஊடகம் வெளியிட்டுள்ள மாநிலங்களின் சிறப்பான செயல்பாடுகளின் தரவரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

பிரபல ஊடகத் தளமான ‘இந்தியா டுடே’ நிறுவனம் ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு (2022) வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 5 ஆவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் 3 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த 2021 மற்றும் இந்த ஆண்டுகளிலும் அதே நிலை தொடர்கிறது. பொருளாதாரம், உட்கட்டமைப்பு வசதி, மருத்துவம், விவசாயம், கல்வி, சட்டம் ஒழுங்கு ஆளுகை, ஒருமித்த வளர்ச்சி, சுற்றுலா, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பிரிவுகளில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் 1303.5 புள்ளிகளுடன் தமிழகம் முதல் இடத்திலும், 1257.2 புள்ளிகளுடன் இமாச்சல் இரண்டாவது இடத்திலும், கேரளா 1252 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், 1,226 புள்ளிகளுடன் குஜராத் 4ஆவது இடத்திலும் உள்ளன. 5வது இடத்தில் பஞ்சாப் உள்ளது.

இதில், பொருளாதார வளர்ச்சியில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு தமிழகம் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

அதுபோல், கடந்த ஆண்டு மருத்துவத்துறையில் 5 ஆவது இடத்திலிருந்த தமிழகம், தற்போது 3 ஆவது இடத்திலும், சுகாதாரத்தில் 7 ஆவது இடத்திலிருந்த தமிழகம் தற்போது 3ஆவது இடத்திலும் உள்ளது.

சிறந்த ஆளுகை பிரிவில் கடந்த ஆண்டு 8ஆவது இடத்திலிருந்த தமிழகம் இந்தாண்டு 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சிறந்த உட்கட்டமைப்பு வசதியில் கடந்தாண்டு 4 ஆவது இடத்திலிருந்த தமிழகம் இந்தாண்டு 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

கலைஞர் பேனா சின்னம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

அதிக சந்தோஷத்தில் அட்லி குடும்பம்: ஏன் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment