தென்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மட்டுமே அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துக் கூறியிருந்ததாகத் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அதிகனமழை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
தென்மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து சென்னையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (டிசம்பர் 19) மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “கடந்த 30 மணி நேரத்தில் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 116செமீ மழை பெய்துள்ளது.
வரலாறு காணாத பெய்த மழையின் காரணமாக கடலோர கிராமங்கள், ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் 1350 பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 160 நிவாரண முகாம்களில் 17,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 9 ஹெலிகாப்டர்கள் மூலமாக 13500 கிலோ உணவு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
வானிலை கணிப்பு பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும் என்று தான் வானிலை வாய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த அறிவிப்புப்படி, அதிகனமழைக்கு அரசு தயாராக இருந்தது. அதிகபட்சமாக 116 செமீ மழை பெய்திருக்கிறது. இந்த மாதிரி மழைக்கு எந்த முயற்சி எடுத்திருந்தாலும், ஒன்றும் செய்திருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை நமக்கு சற்றே தாமதமாக கிடைத்தாலும், அதில் அளித்துள்ள அளவை விட அதிகமாக மழை பொழிவு ஏற்பட்ட சூழ்நிலையிலும், தமிழ்நாடு அரசு முன்கூட்டியே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கடும் போராட்டம்: ரூபாய் 8.4 கோடிக்கு தட்டித்தூக்கிய சென்னை… யாருப்பா இந்த 20 வயசு பையன்?
”மீண்டும் இவரா?” மினி ஏலத்தில் பெங்களூர் அணி கொடுத்த ரியாக்சன் வைரல்!