“ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம்” என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 6) தொடங்கி வைத்தார்.
“ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம்”
சமீப காலங்களில் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் முதலுதவிக்கு சிபிஆர் என்று பெயர். மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிபிஆர் முதலுதவி வழங்குவதால், உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை சார்பில் அனைவருக்கும் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, “ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம்” என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.
“ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம்” என்ற திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 6) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
அப்போது பேசிய, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை தலைவர் அபுல் ஹாசன், “சாலை விபத்துகள் மற்றும் மாரடைப்பின்போது இதயம் செயலிழந்து விடுவதால்தான் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.
அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு , தேவையான முதலுதவிகளை முதலில் செய்தால் அவர்கள் உயிர் பிழைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, அனைவருக்கும் அடிப்படை முதலுதவி பயிற்சிகளை அளிப்பதற்காக உருவானதுதான் “ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம்” திட்டம்.
இந்திய மருத்துவ சங்கத்தின் 177 தமிழக கிளைகளிலும் உள்ள 42,000 மருத்துவர்கள் இந்த பயிற்சியை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல உள்ளனர்” எனக் கூறினார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வயிற்றுப் போக்கைத் தடுத்து நிறுத்த தேசிய அளவிலான இயக்கம்.