தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட சுகாதாரஅலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக கொசுக்களால் மிக வேகமாக பரவும் நோய்களில் ஒன்றான டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
இதனால் திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதன் எதிரொலியாக பொது சுகாதாரத்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், ‘தினசரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இன்புளூயன்சா, மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு கொண்ட உள்நோயாளிகள், பொதுவான அறிகுறிகள் கொண்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
சுகாதார மாவட்டம் வாரியாக தொடர்ந்து டெங்கு பாதிப்புகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.
மருந்து, மாத்திரைகள், தேவையான மருத்துவ உபகரணங்கள், பணியாளர்கள் ஆகியவை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
கிராம, நகர மற்றும் மாநகர வாயிலாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு, புழு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
பொது சுகாதாரத்துறைக்கு மாவட்ட வாரியாக தினசரி காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தான விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
காய்ச்சல் பாதிப்பு தொடர்பான அறிக்கையை தினசரி அரசு, தனியார் மருத்துவமனைகளிடமிருந்து பெற வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தினசரி செயல்பாடுகள், மருந்துகள் இருப்பு, மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
வீடு வீடாக சென்று கொசு புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதுடன், கொசு புழு உற்பத்தியாகாமல் பராமரிக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்” என பொது சுகாதாரத்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
மேலும், கொசு உருவாவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனை சார்ந்த நோய்த்தொற்றைத் தடுக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏடிஸ் லார்வா கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளால் பாதுகாப்பான குடிநீருக்காக குளோரினேஷன் மற்றும் குழாய் கசிவுகளை அவ்வப்போது கண்காணித்தலை உறுதி செய்யப்படும். டெங்கு நோய் மேலாண்மைக்குத் தேவையான ரத்தத் தட்டுக்கள், நோய் கண்டறியும் கருவிகள், மருந்துகள் போன்றவை மாநிலத்தில் போதுமான அளவில் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உலக அளவில் அதிக முறை இணையத்தளம் முடக்கப்பட்ட நாடுகள்: இந்தியாவின் சாதனை!
விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்
ஜார்க்கண்ட் அமைச்சரை கைது செய்த அமலாக்கத்துறை!