சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் டெல்லிக்கு அடுத்தபடியாக காற்று மாசடைந்த நகரங்கள் பட்டியலில் கொல்கத்தா, மும்பையும் இடம்பெற்றுள்ளது. இதில் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு சென்னையில் காற்று மாசு வேகமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு லாப நோக்கமின்றி செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சிஎஸ்இ) கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 பிப்ரவரி வரையிலான குளிர் காலத்தில் நாட்டின் ஆறு பெரு நகரங்களில் காற்று மாசு பற்றி ஆய்வு செய்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், ‘நாட்டில் உள்ள ஆறு பெருநகரங்கள் வெவ்வேறு புவி-காலநிலை மண்டலத்தில் அமைந்திருந்தாலும், நடந்து முடிந்த குளிர்காலத்தில் காற்று மாசு (PM2.5) அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக இருந்துள்ளது. இதில் டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கொல்கத்தா, மும்பை நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
இதற்கு அடுத்தபடியாக பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு காற்று மாசு வேகமாக அதிகரித்துள்ளது. அதேநேரம் டெல்லியில் கடந்த நான்கு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு காற்று மாசு சற்று குறைவாகவே காணப்பட்டது’ என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள சிஎஸ்இ செயல் இயக்குநர் அனுமிதா ராய்சவுத்ரி, “டெல்லியைத் தவிர மற்ற பெருநகரங்களில் காற்று மாசு அதிகரித்து வந்தாலும் அது போதுமான முக்கியத்துவம் பெறவில்லை. ஏனெனில், வடக்கு சமவெளி பகுதிக்கு அப்பால் அந்த நகரங்கள் அமைந்துள்ளதால், சாதகமான வானிலை சூழல் குளிர்காலத்தில் காற்று மாசு உச்சம் தொடுவதை மட்டுப்படுத்திவிட வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை நோக்கி சவப்பெட்டி ஊர்வலப் போராட்டம்!