வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை உயர்ந்ததை அடுத்து உணவு விலையை அதிகரிக்கலாமா என ஓட்டல் உரிமையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலையை பொறுத்தவரையில், 200-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் சிலிண்டருக்கான விலையானது தொடர்ந்து 3வது மாதமாக உயர்வை எட்டியுள்ளது.
ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் சிலிண்டருக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் ரூ.818.50க்கு கடந்த சில மாதங்களாக விற்கப்படுகிறது. ஆனால் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் படிபடியாக உயர்ந்து கொண்டே வருகிறது.
செப்டம்பர் மாதம் ரூ.38 உயர்ந்து ரூ.1,855க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ரூ.48 உயர்ந்து ரூ.1,903க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து மூன்று மாதமாக சிலிண்டர் விலை உயர்ந்து வருவதை அடுத்து டீ, காபி மற்றும் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று பொதுமக்கள் தரப்பில் அச்சம் எழுந்தது.
ஏற்கெனவே சந்தையில் ரூ. 1500 ஆக இருந்த ஒரு மூட்டை வெங்காயம் தற்போது 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளியை பொறுத்தவரை, ரூ.250க்கு விற்கப்பட்ட மீடியம் தக்காளி, ரூ.500 க்கு விற்படுகிறது. ரூ.400க்கு விற்கப்பட்ட பெரிய தக்காளி, ரூ.800 க்கு விற்படுகிறது.
முன்பு 1 கிலோ தேங்காய் 30 ரூபாய்க்கு விறபனையாகி வந்த நிலையில், தற்போது ரூ.70 ஆக உயர்ந்துள்ளது.
இப்படி காய்கறி விலையுடன், தொடர்ந்து வணிக பயன்பட்டிற்கான சிலிண்டர் விலையும் உயர்ந்து வருவதால் டீ,காபி கடைகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தங்களின் மேல் அழுத்தப்பட்டுள்ள நிதிச்சுமையை குறைக்க, உணவு விலையை கூட்டலாமா என ஓட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
அவ்வாறு உணவு விலை உயரும் பட்சத்தில், ஏழை மக்கள் முதல் உயர் வர்க்கம் வரை அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நடிகை சமந்தா குறித்து ஆந்திர அமைச்சர் பேசியது என்ன? கொந்தளிக்கும் திரையுலகம்
மகாவிஷ்ணுவிற்கு ஜாமீன் வழங்கிய முதன்மை நீதிமன்றம்!