முதியோர் உதவித் தொகையை உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 22) தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர்,அமைச்சர்கள், துறை ரீதியான அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,200-ஆக உயர்வு,
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1,500ஆக உயர்வு
கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட உதவித்தொகை ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும்
மொத்தமாக 30,55,857 பயனாளிகள் இந்த திட்டங்கள் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.
இவர்கள் தவிர ஓய்வூதியம் வேண்டும் என்று காத்திருப்போர் பட்டிலில் இருப்பவர்களுக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இந்த திட்டங்களால் அரசுக்கு 845 கோடி ரூபாய் செலவாகும்” என்றார்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “இத்திட்டத்துக்காக மூன்று கட்டங்களாக முகாம்கள் நடத்தப்படவுள்ளன. சென்னையில் நாளை தொடங்குகிறது. நாளை மறுநாள் மற்ற பகுதிகளில் முகாம்கள் தொடங்குகிறது.
மொத்தமாக 35,925 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இங்கு வந்து விண்ணப்பங்கள் கொடுக்க டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 50 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த அனைத்து பயனாளிகளுக்கும் இந்த திட்டம் சென்று சேரும்” என்றார்.
பிரியா
“மணிப்பூர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்”- ஜெயக்குமார்