எஸ்டிபிஐ அலுவலகத்தில் ஏன் திடீர் சோதனை?

தமிழகம்

கோவையில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் மத்திய அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு (செப்டம்பர் 14) திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறையினர் அலுவலர்கள் நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதற்காக 50க்கும் மேற்பட்ட கோவை மாநகர காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

இதனிடையே அமலாக்கத் துறையினரின் திடீர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவை எஸ்டிபிஐ அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனை தொடர்பாகவே இந்த சோதனை நடைபெற்றதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சோதனை இரவு 11 மணி அளவில் முடிவடைந்த நிலையில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்றிய அரசுக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும்!

எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தில், சோதனை என்ற பெயரில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தனது கைப்பாவையான மத்திய வருமான வரித்துறையின் மூலமாக ஏவிவிடும் ஒன்றிய பாஜக அரசின் ஏதேச்சதிகாரப் போக்கு கண்டிக்கத்தக்கது.

இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளின் மூலம் ஒருபோதும் ஜனநாயகத்தின் குரலை நசுக்கிவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்ற அராஜக அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

டிஜிட்டல் திண்ணை : விஜிலென்ஸ் ரெய்டு – விஜயபாஸ்கர் ரிலாக்ஸ் ரகசியம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *