உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் ஓட்டுகள் மறு எண்ணிக்கை இன்று (ஜூலை 13) காலை தொடங்கியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.பழனி நாடாரும், அதிமுக வேட்பாளராக செல்வ மோகன் தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர்.
இதில் 382 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட நிலையில் பழனி நாடார் (89,315) தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை (88,945) விட 370 வாக்குகள் அதிகம் பெற்று எம்.எல்.ஏ ஆனார்.
இதனையடுத்து தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக அதிமுகவின் செல்வ மோகன் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 5ஆம் தேதி தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி 10 நாட்களில் முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன் எதிரொலியாக இன்று காலை 10 மணியளவில் தென்காசி தொகுதியில் தபால் ஓட்டு மறு எண்ணிக்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.
தற்போது தென்காசி ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
பிற்பகலுக்குள் வாக்குகள் எண்ணப்பட்டவுடன் முடிவை மாவட்ட ஆட்சியர் உடனடியாக அறிவிக்க உள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
விண்ணில் பாயவுள்ள சந்திரயான் 3: என்ன ஸ்பெஷல்?
”கலைஞர் இல்லையெனில் அண்ணாமலை ஆடு மேய்த்திருப்பார்”: ஆ.ராசா