மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நாளை (நவம்பர் 4) தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நவம்பர் 6 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இன்று, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனிடையே நாளை மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா