“ஊரே சுடுகாடா கிடக்குது” என எக்கியர்குப்பம், பெருங்கரனை பகுதி மக்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி எக்கியர்குப்பத்தைச் சேர்ந்த 14 பேர் இதுவரை உயிரிழந்திருக்கின்றனர். அந்த மீனவ கிராமமே தற்போது சோகத்தில் மூழ்கியிருக்கிறது. திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம்.
அந்த கிராமத்தின் தற்போதைய நிலை என்ன?. மின்னம்பலம் சார்பில் எக்கியர்குப்பத்துக்கு சென்றோம்.
செல்லும் போதே சாவு மேளமும், குடித்துவிட்டு உயிரிழந்தவர்களின் மனைவி, மகள், தாய்மார்களின் அழுகை குரலும் மனதை கனக்க செய்தது.
எக்கியர்குப்பம் ஏழாவது வார்டுக்குள் சென்றோம். அடுத்தடுத்த வீடுகளின் வாசலில் ஐஸ்பெட்டியில் உடல்கள்… “இனி உன்ன எப்ப பாக்க போறேனோ” என்ற அழுகை குரலைத்தான் கேட்க முடிந்தது.
என்ன நடந்தது கிராம மக்களிடம் பேசினோம்.
10 லட்சம் கொடுத்தால் போதுமா?
எக்கியர்குப்பத்தைச் சேர்ந்த மீனா
“அரசு 10 லட்சம் கொடுக்குறாங்க… இப்படி கொடுத்தால் போதுமா?. போலீஸ் கரெக்ட்டான நடவடிக்கை எடுத்துருந்தா இவங்க போய் குடிப்பாங்களா?
தொழிலுக்கு போனா ரூ.300, ரூ.400 தான் கிடைக்குது. அதுல 100 ரூபாவ எடுத்துத்துட்டு போய் குடிக்குறாங்க. பாட்டில வாங்கி குடிக்கிற அளவுக்கு அவங்களுக்கு வசதி இல்ல. 3 பாக்கெட்டு 100 ரூபானு வாங்கி குடிக்கிறாங்க. அன்னிக்குனு பாத்து ஒரு பாக்கெட் எக்ஸ்ட்ரா கொடுக்கிறாங்க. இவங்களுக்கு அறிவில்ல. ஏன் எக்ஸ்ட்ரா கொடுக்குறாங்க , ஏன் இவ்ளோ கலரா இருக்குனு அவங்களுக்கு கேக்க தோனல… வருஷ கணக்குல குடிக்கிறவங்கதான் இவங்க… இப்ப மட்டும் இப்படி ஆனது எப்படி?”
ரஞ்சித்
“பாண்டிச்சேரில இருந்துதான் சரக்கு எடுத்துட்டு வந்து விக்கிறாங்க. ஒரு பாக்கெட் 40 முதல் 50 வரை விப்பாங்க. ஆனா கடந்த சனி, ஞாயிறுல மட்டும் 25 ரூபாய்க்கு வித்துருக்காங்க. 4 வாங்கினதுக்கு ஒன்னு ப்ரீயாவே குடுத்துருக்காங்க. எப்பவும் சாராய பாக்கெட்டுலாம் வெல்ல கலர்லதான் இருக்கும். இந்த வாட்டி வாங்கின பாக்கெட்டுலாம் மஞ்சள் கலரில் இருந்திருக்கிறது. சிஎம் ஸ்டெப் எடுக்கணும்”
வேலு
“கலால் அதிகாரிகள் பிடிச்ச சரக்கை எடுத்து கவுன்சிலர்கிட்ட கொடுத்து விக்க சொல்லிருக்காங்க. ஸ்டாக் வச்சிருந்த சரக்கதான் வித்துருக்காங்க. இதுக்கு போலீஸ் உடந்தை”
சிவக்குமார்
“அதிகாரிங்க அனுமதி இல்லாம இந்த சரக்கு விக்காது. சரக்கு விக்குறதை தடுக்க வேண்டும். மாமூல் கிடைச்சா போதும்னு வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிறாங்க. இதனால் விக்கிறவன் கொண்டாட்டமா இருக்கான். 55 பேர்ல ஒருத்தன் கூட உயிரோட வரமாட்டன். எக்கியர்குப்பமே சுடுகாடா கிடக்குது. மூலைக்கு மூல கஞ்சா , சரக்கு விக்கிறாங்க”
தேன்மொழி
“நாங்கள் அன்றாடம் காட்சி. ஏன் குடிக்கிறீங்க, குடிக்காதீங்கனு சொன்னா… வலை போட்டுட்டு வந்தேன், உடம்புலாம் வலிக்குது. அதனால குடிக்கிறேன் என்பார்கள். காலம் காலமாக குடிக்கிறார்கள்.
இவ்வளவு பேர் குடிக்கிற சரக்கை எப்படி போலீசாரால் கண்டு பிடிக்க முடியாமல் போனது. போலீஸுக்கு தெரியாம எதுவும் நடக்காது. 2 மாசமா தொழில் இல்லாமல் கஷ்டப்படுறோம். காசு இல்லாதவங்க இந்த சரக்கதான் குடிக்குறாங்க”
என்று தங்கள் கஷ்டத்தை கொட்டினார்.
அப்பா கொடுக்குற 10 ரூவா
அங்கிருந்து செங்கல்பட்டு புறப்பட்டோம். கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட கிராமமான பெருங்கரனைக்கு சென்றோம்.
அந்த பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் குடும்பத்தில் 2 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்திருக்கின்றனர்.
தனது அம்மாவையும், மாமாவையும் இழந்து நிற்கும் ஆறுமுகம் கூறுகையில், “கட்ட பொழக்க போனாங்க. அங்க அமாவாசை அண்ணன் எங்க மாமாவ பில்லு வெட்டுற மிஷன ஒட்டுறதுக்கு வாடா என்று கூப்பிட்டுக்காரு. சரினு மாமாவும் போய் ஓட்டியிருக்காரு. வேல முடிஞ்சதும் என்கிட்ட காசு இல்ல, சரக்குதான்டா இருக்குனு அமாவாசை அண்ணன் சொல்லிருக்காரு. சரினு அதை வாங்கி வந்து எங்கா மாமா, அம்மா, அக்கா மூன்று பேரும் குடிச்சிருக்காங்க.
அடுத்த நாள் காலை எங்க அம்மா, அண்ணன், நான் என 3 பேரும் வேலைக்கு போய்ட்டோம். போன இடத்துல அப்படியே அம்மா உட்காந்துட்டாங்க. பின்னர் வீட்டுக்கு வந்து மூணு பேருக்கும் லிம்கா வாங்கிக் கொடுத்தேன்.
பின்னர் நான் மாட்டுக்கு தண்ணி காட்ட கழனிக்கு போய்ட்டேன். மீண்டும் வந்து பாத்தா எங்க மாமாவும், அம்மாவும் இறந்து கிடந்தாங்க. அக்காவ ஆம்புலன்ஸ் மூலம் ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போய்ட்டாங்க” என்றார்.
இந்திரா
“விஷ சாராயம்னு சொல்றாங்க. நான் என்ன பண்ணுவேன். அப்பாவ நல்லாதான் ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டு போனாங்க. திங்கள் கிழமை 10 மணிக்குக்கெல்லாம் செத்துட்டாரு. என் உசுரு போகுதுமா, சீக்கிரம் வானு சொன்னாரு.
எங்களுக்கு பணம் வேணாம். எங்க அப்பாதான் வேணும். இந்த பணத்த வாங்கி நான் என்ன பண்ணுவேன். எங்க அப்பா 10 ரூபா கொடுத்தா போதும். அப்பா 10 ரூவா கொடுக்குற மாதிரி வருமா. என்ன வந்து பஸ் ஏத்திவிடுவாரு. இனி யாரு பஸ் ஏத்திவிட வருவா” என கண்ணீருடன் கூறினார்.
புருஷோத்தமன்
10 லட்சம் கொடுத்துட்டா, ஒரு குடும்பத்துல ஆம்புள இருக்க மாதிரி வருமா. ஒரு சின்ன பையன் செத்துட்டான். கைதான அமாவாசை சாராய வியாபாரிலாம் கிடையாது. ஒரு விவசாயிதான். 10, 15 ஏக்கர்ல விவசாயம் செய்யுறாரு. விவசாயத்துக்கு ஆளு வேணும்னா போய் கூப்பிட்டா வரமாட்டாங்க. சரக்கு வாங்கிக் குடுத்தாதான் வருவேனு சொல்லுவாங்க.
நாத்து தூக்கி போட்டா அவனுக்கு கை கால் எல்லாம் ஒதறுது. சாராயம் வேணுங்கிறான். 6 மணிக்கு எந்த ஒயின் ஷாப் தொறந்துருப்பாங்க. அதனால யாரையாவது பிடிச்சி 5, 10 லிட்டர் வாங்கிட்டு வந்து வச்சிக்குவாரு. வேலைக்கு போறவங்களுக்கு கொடுப்பாரு”
வேணு
இங்க ஒரு பையன் இறந்துட்டான். அவன் பேரு புல்லட்டு. பயிறு வச்சிருக்க நானே ஒரு சில பயிற மிதிச்சுருவேன். ஆனால் மருந்தடிக்க வரும் அவன், ஒரு பயிற கூட மிதிக்கமாட்டான். கால அழக நகர்த்தி வச்சி வேலை செய்வான். இன்னிக்கு குடிச்சிட்டு செத்துட்டான். வருத்தமா இருக்கு” என பெருங்கரனை மக்கள் தங்கள் வேதனையை கொட்டினர்.
பேசியவர்கள் அனைவரும் இனி இதுபோன்று மரணங்கள் ஏற்படாதவாறு அரசும் போலீஸும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
வீடியோவில் காண : https://www.youtube.com/watch?v=pJusCmX08nA
களத்தில் : ஃபெலிக்ஸ்
தொகுப்பு : பிரியா
கர்நாடகா முதல்வர் அறிவிப்பு எப்போது? ரன்தீப் சுர்ஜேவாலா தகவல்!
LSG vs MI: தந்தைக்கு வெற்றியை சமர்ப்பித்த மகன்!