கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 21) நேரில் ஆறுதல் கூறினார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். 90க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும் அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று (ஜூன் 20) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 21) கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் 90 சதவித மக்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
அடுத்த சில நாட்களில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், எனக்கு நம்பிக்கை இருக்கிறது. விரைவில் அனைவரும் குணமடைவார்கள். இழந்தது போதும்.
பல அரசியல் கட்சி தலைவர்கள் பேசினார்கள். முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் பதில் கொடுத்தார். எங்களுடைய கேள்வி என்னவென்றால், கடந்த ஆண்டு விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தில் சுமார் 29 பேர் உயிரிழந்தனர்.
அப்போதும் முதல்வர் ஸ்டாலின், இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுப்போம், இதை இரும்புகரம் கொண்டு அடக்குவோம் என்று கூறினார்.
அடுத்த 10 மாதத்தில் தற்போது கள்ளக்குறிச்சியில் மிகப்பெரிய ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதற்கு அவர் என்ன பதில் சொல்ல போகிறார்? இதற்கு முதல்வர் ஸ்டாலின் முழுப் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.
கள்ளச்சாராய விவகாரத்தில் யார் யாரெல்லாம் சம்மந்தப்பட்டுள்ளார்களோ அவர்கள் அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் மிகப்பெரிய அரசியல் புள்ளிகள் எல்லாம் இடம் பெற்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் மீது எங்களுக்கு மரியாதை உள்ளது. ஆனால், அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. காரணம், இந்த வழக்கில் ஆளுங்கட்சியின் புள்ளிகள் இடம்பெற்றுள்ளனர். அதனால், முழுமையான அறிக்கை வராது.
எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். மேலும், முதல்வருக்கு ஒரு கோரிக்கை உள்ளது. மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி, கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு இருவரும் பதவி விலக வேண்டும். அல்லது அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, “சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோரது ஆதரவால் தான் அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது.
கல்வராயன் மலைப்பகுதியில் 30 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் உதயசூரியனுக்கு தான் வாக்களிப்பார்கள். காரணம், அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு இவர் தான் ஆதரவாக உள்ளார். சாராயம் காய்ச்சுபவர்கள் யாராவது காவல்துறையால் கைது செய்யப்பட்டால், இவர் உடனடியாக அவர்களை விடுவிப்பார்.
ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் அனுமதியில்லாமல் இங்கே எதுவும் நடைபெறாது. பொறுப்பில்லாத அமைச்சராக செயல்படுகிறார். இவர் தான் சாராயம் விற்பவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை விடுதலை செய்வார். எனவே இரண்டு மாவட்ட செயலாளர்களையும் கைது செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாட்டு எம்.பிக்கள் செய்ய வேண்டியது என்ன?
கள்ளச்சாராய மரணம்: நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!