விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் வழக்கில் கைது செய்யப்பட்ட அமரனைத் தொடர்ந்து, முக்கிய குற்றவாளியான முத்துவைத் தேடி போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி பகுதியில் உள்ள மீனவர் கிராமமான எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் மூவர் இறந்தும், இருவர் அபாயகரமான நிலையிலும் மற்றவர்கள் மருத்துவ மனைகளில் உயர் சிகிச்சையும் பெற்று வருகின்றனர்
இந்த சம்பவத்தில் அமரன் என்ற குற்றவாளியை காவல் கண்காணிப்பு வளையத்தில் விசாரணை செய்து வருகிறார்கள் என்று கடந்த பதிப்பில் விரிவான செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
டார்ச்சர் செய்கிறார்கள்!
இந்நிலையில் கள்ளச்சாராயம் தொடர்பான வழக்கில் விசாரித்தபோது, மரக்காணம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின் குமுறல்கள் மூலம் அப்பட்டமான கள நிலவரம் வெளிவந்துள்ளது.
”இந்த திமுக ஆட்சி எப்போது வந்ததோ அப்போதே போலீசார் மீதான மரியாதை இல்லாமல் போச்சு, சட்ட ஒழுங்கும் தள்ளாடி வருகிறது.
எந்த கேசு பிடிச்சாலும் ஒன்றியம் பேசுகிறேன், சேர்மன் பேசுகிறேன், நகரம் பேசுகிறேன் என்று டார்ச்சர் செய்கிறார்கள்.
சமீபத்தில் மரக்காணம் பகுதியில் நந்தகுமார் என்ற சாராய வியாபாரியைப் போலீசார் பிடித்தபோது, மரக்காணம் பேரூராட்சி சேர்மன் ரவிக்குமார் போலீஸைத் தொடர்புகொண்டு ”என்னாங்கய்யா உங்கள் தொல்லை தாங்க முடியவில்லை, அவனை விடுங்கள்” என்று கோபப்பட்டார். இதே நிலைதான் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நிலவுகிறது” என்று வேதனையுடன் கூறுகின்றனர் போலீசார்.
அமரன் வாக்குமூலம்
சரி சாராய வியாபாரி அமரன், போலீஸ் விசாரணையில் என்ன வாக்குமூலம் கொடுத்தார் என்று விசாரித்தோம்.
“நான் கூலிக்கு சாராயம் விற்பனை செய்கிறேன், என்னை விற்பனை செய்ய சொன்னது எங்கள் ஊர் முத்து, அவரை விசாரித்தால்தான் சாராயம் எங்கே, யாரிடம் வாங்கினார் என்று தெரியும்” என்றார்.
அமரன் வாக்குமூலத்தை வைத்து தற்போது மரக்காணம் முத்துவைத் தேடி சென்னை நோக்கி சென்றுள்ளது ஸ்பெஷல் டீம்.
முத்துவை பிடித்து காவல் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்த பிறகுதான் புதுச்சேரியில் சாராயம் சப்ளை செய்தவர் யார் என்று தெரிய வரும்.
வணங்காமுடி
தமிழகத்தில் விஷ சாராயம் குடித்து மூவர் பலி: 24 பேர் உயிருக்கு போராட்டம்… முழு விபரம் என்ன?
’தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராயம்’: எடப்பாடி கண்டனம்!