பிரபலமான சாராய வியாபாரியை, சென்னை ஸ்பெஷல் டீம் போலீஸார் கையும் களவுமாக பிடித்து, கிளை சிறையில் அடைத்து குண்டாஸ் போட முயன்றதை அமைச்சர் மஸ்தான் குடும்பம் அன்று தடுத்து நிறுத்தியது. ஆனால் மின்னம்பலம் செய்தியின் எதிரொலியால் நேற்று (மே 16) ஒரேநாளில் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட சுமார் 50 பேர் முண்டியம்பாக்கம், பாண்டிச்சேரி ஜிப்மர் மற்றும் பிம்ஸ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதேசமயம், விஷ சாராயம் விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதில் மரக்காணத்தைச் சேர்ந்த முத்து என்பவரை பிடித்து விசாரித்ததில், அவர் தனக்கு சாராயம் சப்ளை செய்தது மரூர் ராஜாதான் என வாக்குமூலம் கொடுத்தார்.
அதன்படி கடந்த மாதம் 18ஆம் தேதி, பிரபலமான மொத்த வியாபாரி மரூர் ராஜாவை கைது செய்து அவர் வீட்டிலிருந்த சாராய கேன்கள், பாக்கெட் போடும் மெஷின்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் வழக்கு போட்டு திண்டிவனம் கிளை சிறையில் வைத்தனர். கைதான மரூர் ராஜா அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமானவர்.
“ராஜா சிறையில் இருந்தாலும் அவரது சாராய நெட்வொர்க்குக்கு எந்த பாதிப்பும் இல்லை. தனது ஆட்கள் மூலம் அமைச்சர் குடும்பத்தின் ஆதரவோடு கள்ளச்சாராய சப்ளையை தடையில்லாமல் செய்து வருகிறார். இதேபோல சாராய வியாபாரிகளை கைது செய்தால் அடுத்த சில நாட்களில் குண்டாஸ் போட்டு விடுவார்கள். ஆனால் அமைச்சர் மஸ்தானின் அழுத்தத்தால் கைதானாலும் ராஜா மீது இன்னமும் குண்டாஸ் போட முடியவில்லை. மேலும் கடலூர் அல்லது வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட வேண்டிய மரூர் ராஜா… அமைச்சர் மஸ்தானின் செல்வாக்கால் இன்னமும் திண்டிவனம் கிளைச் சிறையில்தான் இருக்கிறார். ஏனெனில் கிளைச் சிறையில் கட்டுப்பாடுகள் குறைவு” என்று திண்டிவனம் போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
மரூர் ராஜா மீது குண்டாஸ் போடாமல் அமைச்சர் மஸ்தான் குடும்பத்தினர் தடுத்தனர் என்ற செய்தியை நமது மின்னம்பலம்.காம் தளத்தில் மே 15 ஆம் தேதி வெளியான பதிப்பில், ’கள்ளச்சாராய குற்றவாளியுடன் அமைச்சர் மஸ்தான்… என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் விரிவான புலனாய்வு செய்தியை வெளியிட்டிருந்தோம்.
மின்னம்பலம் செய்தி பற்றி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர் கோட்டையிலிருந்த அதிகாரிகள்.
நேற்று மே 16 ஆம் தேதி காலையில் மாவட்ட ஆட்சியர் பழனி, மரூர் ராஜாவின் குண்டாஸ் கோப்புப்பற்றி கேட்டவர் அவசரமாக கையெழுத்து போட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்க சொல்லியுள்ளார்.

காவல் துறை அதிகாரிகளும் மரூர் ராஜாவை குண்டாஸில் கைது செய்து கடலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
குண்டாஸ் என்பது ஒருநாள் அல்லது ஒரு மணி நேரத்து வேலை இல்லை. குண்டாஸ் பைல் தயார் செய்ய குறைந்தது மூன்று நாட்கள் ஆகும். அதன் பிறகு டிஎஸ்பி யிடம் ஒப்புதல் பெற்று, மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.பி பரிந்துரை செய்வார்.
அதனை ஆட்சியர் அலுவலகம் கோட்டாட்சியருக்கு அனுப்பும். அவர் தாசில்தாருக்கு அனுப்புவார், அவர் கிராம அலுவலர்( VAO)க்கு அனுப்பி வைப்பார்.
விஏஒ சம்பந்தப்பட்ட கிராமத்தில் விசாரித்து இவனால் சட்டம் ஒழுங்கு கெடும் என்றோ, சமூக விரோதி என்றோ அல்லது நல்லவர் என்றோ பரிந்துரை செய்வார்.
அதன் பிறகு தாசில்தார், ஆர்டிஒ(கோட்டாட்சியர்), துணை ஆட்சியர் சட்டப் பிரிவு என படிப்படியாக சென்று கடைசியாக கலெக்டர் மேஜைக்கு போகும்.
அவர் பார்த்து கையெழுத்து போட்டால் ஆச்சு, இல்லை என்றால் குண்டாஸ் பைல் கிடப்பில்தான் கிடக்கும்.

குண்டாஸ் போடுவதற்கு இவ்வளவு நடைமுறை இருக்கும் போது, மரூர் ராஜா மீது இன்று ஒரே நாளில் ஆட்சியர் கையெழுத்திட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைத்திருப்பது சாதனையான விஷயம் தான் என்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர்.
“இவ்வளவு நடைமுறைகள் இருந்தும் ஒரே நாளில் குண்டாஸ் பாய்ந்துள்ளது என்றால் அந்த ஃபைல் ஏற்கனவே தயாராகிதான் இருந்திருக்கிறது. அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்கவிடாமல் அமைச்சர் தரப்புதான் தடுத்து வைத்திருந்திருக்கிறது” என்கிறார்கள் விழுப்புரம் திமுகவைச் சேர்ந்த சிலரே.
வணங்காமுடி
கள்ளச்சாராய வழக்கு: முக்கிய சப்ளையரை கைகாட்டிய மரூர் ராஜா
டிஜிட்டல் திண்ணை: நெருக்கடியில் செந்தில்பாலாஜி… ரகசியமாய் ரசிக்கும் திமுக அமைச்சர்கள்!
இனியாவது பாய தூங்க விடுங்கடா..
அப்ரசண்டி அனைத்து டுபாக்கூர் யாவாரிகளா! 😋