சர்வதேச அழைப்பை உள்ளூர் அழைப்பாக மாற்றும் சட்ட விரோத நெட்வொர்க்: சேலம் பகீர்!

தமிழகம்

சட்ட விரோதமான தொலைத் தொடர்பு  அமைப்பு சேலத்தில் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக  மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று (பிப்ரவரி 15) வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ”  தொலைத் தகவல் தொடர்புத்துறை, தமிழ்நாடு ஏர் டெல், பிஎஸ்என்எல் தமிழ்நாடு ஆகியவற்றால் அளிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை – சேலம் மற்றும் மத்திய புலனாய்வு உள்ளிட்ட சட்ட அமலாக்க முகமைகள் சேலம் மாவட்டத்தில் உள்ள மெய்யனூர் மற்றும் கொண்டாலம்பட்டிப் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் கூட்டாக பிப்ரவரி 13 ஆம் தேதி திடீர் சோதனை மேற்கொண்டன.

அப்போது அங்கே சட்டவிரோதமான தொலைத் தகவல் தொடர்பு அமைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிம் கார்டு பெட்டிகள், சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படும் கம்பியில்லா இணையதளக் கருவி போன்றவை கண்டெடுக்கப்பட்டன. சர்வதேச அழைப்புகளை தேசிய அல்லது உள்ளூர் அழைப்புகளாக மாற்றுவது தேசப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதோடு தொலைத்தகவல் தொடர்பு சேவை வழங்குவோருக்கும் அரசு கருவூலத்திற்கும் இழப்பை ஏற்படுத்துவதும் ஆகும்.

இந்நிலையில், சேலத்தில், சட்டவிரோத தொலைத் தகவல் தொடர்பு அமைப்புகள் செயல்பட்ட இரண்டு இடங்களை கண்டறிந்தபோது அவற்றிலிருந்து 19 சிம் கேட்வேகளும், பயன்படுத்தப்பட்ட சுமார் 750 பிஎஸ்என்எல் சிம் கார்டுகளும், சிம் கார்டிலிருந்து வைஃபை ஹாட்ஸ்பாட்டுக்கு மாற்றுகின்ற 11 கருவிகளும், செல்பேசிகளும், இதர சில சாதனங்களும், தமிழ்நாடு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சட்டவிரோத செயல்களை செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  “சர்வதேச அழைப்புகள், உள்ளூர் அல்லது தேசிய அழைப்புகளாக மாற்றப்பட்டு அல்லது செல்பேசிகளில் எண் எதுவும் காண்பிக்காமல் வரும் அழைப்புகள் குறித்து தொலைத்தகவல் தொடர்புத்துறைக்கு 1800 110 420 / 1963 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் அழைத்து தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: நெடுமாறன் தந்த நெருக்கடி- முறியடித்த  ஸ்டாலின்

போதை மருந்து செலுத்தி பாலியல் பலாத்காரம் : திகில் கிளப்பும் விழுப்புரம் ஆசிரமம்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
2