முறைகேடாக கிராவல் மண் அள்ளிச்சென்ற லாரி தடுத்து நிறுத்தம்!

Published On:

| By Guru Krishna Hari

திருச்சி மாவட்டத்தில் வழங்கிய அனுமதியை வைத்துக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டப் பகுதியில் கிராவல் மண் அள்ளிச்சென்ற லாரியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்ட அனுமதியை வைத்துக்கொண்டு விராலிமலை தாலுகா, குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கலிமங்களம் அருகே திருச்சி மாவட்ட எல்லையான துறைக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனிநபர் ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தில் திருச்சி மாவட்ட அனுமதி பெற்று கிராவல் மண் அள்ளி விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த அனுமதியை வைத்துக்கொண்டு அவரது இடத்தின் ஒட்டிய பகுதியான விராலிமலை தாலுகா, குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த் துறை அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி விற்பனை செய்து வருவதாக கலிமங்களம் கிராமத்தை சேர்ந்த பன்னீர் என்பவர் புகார் கூறி வந்தார். சுமார் 30 அடி ஆழத்துக்கு மேல் பள்ளம் தோண்டி கிராவல் மண் அள்ளி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்து பெரிய அளவிலான டிப்பர் லாரிகளில் அதிக அளவில் கிராவல் மண் அள்ளிச் செல்வதால் கலிமங்களத்தில் இருந்து நாகமங்கலம் வரை புதிதாக போடப்பட்ட தார் சாலை சேதமடைவதாகவும் மண் அள்ளிக்கொண்டு குறுகிய சாலையில் அதிவேகத்தில் வரும் டிப்பர் லாரிகளால் சாலை ஓரத்தில் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களிலும் நடைபயணமாகவும் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு மரண பயத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அப்பகுதியினர் கூறி வந்தனர். குறிப்பாக கலிமங்களத்தில் இருந்து நாகமங்கலம் வரை உள்ள 4 கிலோமீட்டர் தூரத்தில் ஐந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருச்சி மாவட்ட அனுமதியை வைத்துக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டப் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிச் செல்வதை கண்டித்தும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் நடமாட்டம் உள்ள சாலையில் லாரிகள் அதிவேகமாக செல்வதை கண்டித்தும் குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவ்வழியே கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை குன்னத்தூரில் நேற்று காலை தடுத்து நிறுத்தினர். மேலும் அவ்வழியே கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வரும் லாரிகள் ஊராட்சிக்கு வரி செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

இதுகுறித்த தகவல் அறிந்த மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை தடுத்து நிறுத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து லாரியை விடுவித்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்ந்து திருச்சி மாவட்ட அனுமதியை வைத்துக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டப் பகுதியில் கிராவல் மண் அள்ளிச் செல்வதை தடுத்து நிறுத்த கோரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீஸார் அறிவுறுத்தினர்.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel