சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகாலில் கழிவுநீரை விட்ட 1,813 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.5,98,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் மழைநீர் வடிகால் துறையின் மூலம் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு, பழுதடைந்த மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில் ஆங்காங்கே சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் மழைநீர் வடிகால்களில் மழைக்காலங்களில் மழைநீர் செல்வது தடைபட்டு நீர்த்தேக்கம் ஏற்படுகிறது.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் சட்டவிரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில், 13.01.2023 முதல் 03.02.2023 வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில்,
1,813 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.5,98,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை தவிர்க்க வேண்டும். மீறினால் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
29 நாடுகளில் ஜி20 உணவுத் திருவிழா!
துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்: 8 ஆயிரத்தைத் தாண்டிய பலி எண்ணிக்கை!