குண்டர் சட்ட அதிகாரத்தை ஐஜிக்கு மாற்றும் சட்டத் திருத்தத்தை 4 வாரங்களில் மேற்கொண்டு அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜூன் 28) உத்தரவிட்டுள்ளது.
தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்க இறுதியாக கையெழுத்திடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கே உள்ளது.
இந்நிலையில், தனது மகன் மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கைக்கு எதிராக திண்டுக்கல்லை சேர்ந்த நாகராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், ”குண்டாஸ் வழக்கில் கையெழுத்திடும் அதிகாரம் ஆட்சியர்களிடம் தற்போது உள்ளது. ஆனால் அவர்களுக்கு பல்வேறு பணிகள் உள்ளதால் இதில் கவனம் செலுத்த முடிவதில்லை.
எனவே குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் இறுதியாக கையெழுத்திடும் அதிகாரத்தை அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட ஐ.ஜிகளுக்கு வழங்க வேண்டும். மாநகரைப் பொறுத்தவரை மாநகர காவல் ஆணையருக்கு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இதனையடுத்து குண்டர் சட்ட அதிகாரத்தை ஐஜிக்கு வழங்கும் வகையில் மாற்றம் செய்ய 4 வாரம் அவகாசம் தேவை என்று உள்துறை செயலர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தேவையான சட்டத் திருத்தத்தை 4 வாரங்களில் மேற்கொண்டு அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
சோழர் தேசத்தில் சீனப் பொருட்கள் கண்டெடுப்பு : அமைச்சர் தகவல்!
பொது சிவில் சட்டம் : ஆம் ஆத்மி ஆதரவு!