திருவண்ணாமலை ஏடிஎம் இயந்திரம் கொள்ளையில் வெளிமாநிலத்தவர்கள் ஈடுபட்டதாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 12) அதிகாலை 4 ஏடிஎம் இயந்திரங்கள் கேஸ் கட்டிங் இயந்திரம் மூலமாக துளையிடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது.
இதுகுறித்து திருவண்ணாமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் வாகன தணிக்கை செய்ய டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், ஏடிஎம் கொள்ளை நடைபெற்ற இடங்களை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று விடியற்காலையில் 4 இடங்களில் ஏடிஎம் திருட்டு நடந்துள்ளது. கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலமாக ஏடிஎம் இயந்திரத்தில் துளையிட்டு கொள்ளை அடித்துள்ளார்கள்.
வெளிமாநிலத்தவர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள். கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் குறித்து நன்கு தெரிந்தவர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்கு ஏடிஎம் மையங்களில் சேர்த்து மொத்தமாக ரூ.70 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டவர்கள் மீது கண்டிப்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இதே பாணியில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
”நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனமாடிய ஆனந்த் மஹிந்திரா: கற்றுக்கொடுத்த ராம் சரண்
ஜார்கண்ட் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்!