திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் 10 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் குற்றவாளிகள் பெயரை விரைவில் வெளியிடுவோம் என்றும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 ஏடிஎம்களில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி நள்ளிரவு கொள்ளை நடந்தது. இதில் ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்தநிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (பிப்ரவரி 16) அவர் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கர்நாடகா மாநிலம் கோலார் தங்கவயல், குஜராத் மாநிலம் வடோதரா, ஹரியானா மாநிலம் ஆகிய பகுதிகளில் தனிப்படையினர் விரைந்துள்ளனர்.
அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு குஜராத் மாநிலத்தில் பதுங்கியுள்ள 6 நபர்களிடமும் விமானம் மூலம் ஹரியானா தப்பிச் சென்ற இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மொத்தமாக 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கிடைத்துள்ளது.
குற்றவாளிகளின் பெயர்களை நாங்கள் விரைவில் வெளியிடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
வாக்காளர் பட்டியலில் முறைகேடு: அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: அடையாற்றில் சுரங்கம் தோண்டும் பணி!