ஆருத்ரா மோசடி வழக்கில் இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி ஆசியம்மாள், “பொருளாதார குற்றப்பிரிவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மே 15-ஆம் தேதி வரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
31 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட 19 வழக்குகளில் 350 கோடி ரூபாய் பொதுமக்களிடம் இருந்து ஏமாற்றப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஐஎஃப்எஸ் மோசடி வழக்கில் மே 3-ஆம் தேதி இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 25 அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் இதுவரை 61 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பதுங்கியுள்ள முக்கிய குற்றவாளிகள் ராஜசேகர் மற்றும் உஷா ஆகியோரை பிடிப்பதற்காக ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆருத்ரா கோல்டு வழக்கில் நேற்று 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். ஹிஜாவு வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 60 அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மே 17-ஆம் தேதி நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம். கோயம்புத்தூரில் உள்ள யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் நிறுவனத்தில் மோசடி செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம்.
ஐந்து இடங்களில் சோதனை நடத்தி மூன்று கார்கள் மற்றும் 6 கணிணிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 9.82 கோடி பணம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது. 27 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆருத்ரா வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த வழக்கில் இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம்.
ஐஎஃப்எஸ், ஹிஜாவு, ஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகள் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிப்பதற்காக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
“சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த ஐடி ரெய்டு”: ஆர்.எஸ்.பாரதி
இறுதி போட்டிக்கு செல்லப்போவது யார்? குஜராத்-மும்பை பலப்பரீட்சை!