ஆருத்ரா, ஹிஜாவு மோசடி: இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? – ஐ.ஜி விளக்கம்

தமிழகம்

ஆருத்ரா கோல்டு, ஹிஜாவு உள்ளிட்ட மோசடி நிறுவனங்கள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.ஆசியம்மாள் இன்று (மார்ச் 15) விளக்கம் அளித்தார்.

ஆரூத்ரா – ரூ.96 கோடி முடக்கம்

அவர் பேசுகையில் “ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.5.57 கோடி, 2.2 கிலோ தங்கம், 1.9 கிலோ வெள்ளி, 18 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 10,000 பேர் புகார் அளித்துள்ளனர்.

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் 120 வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு அதில் உள்ள ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளன. 113 அசையா சொத்துகள் கண்டறியப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற மூவர் உட்பட 6 குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்னும் 1 மாத காலத்திற்குள் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். என்று தெரிவித்தார்.

52 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு

தொடர்ந்து அவர், “முதலீட்டாளர்களுக்கு 15 சதவீதம் வட்டி தருவதாக கூறி மோசடி செய்துள்ளது ஹிஜாவு நிறுவனம். இதன்மீது 10 ஆயிரம் பேரிடம் புகார்கள் பெறப்பட்ட நிலையில், இதுவரை 52 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

89,000 பேரிடம் முதலீடு பெற்று சுமார் ரூ.4,400 கோடி வரை ஹிஜாவு நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் இதுவரை 48 இடங்களில் சோதனை செய்யப்பட்டு, ரூ.3.34 கோடி, 56 சவரன் தங்கம், 1 கிலோ வெள்ளி மற்றும் 8 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை ஹிஜாவு நிறுவனம் தொடர்பான 162 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.14.47 கோடி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரு மாத காலத்திற்குள் முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

ஐ.எஃப்.எஸ் நிறுவனம் – ரூ.6,000 கோடி

மேலும் அவர், ”ஐ.எஃப்.எஸ் நிறுவனம் 84 ஆயிரம் பேரிடம் முதலீடு பெற்று ரூ.6,000 கோடி மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் தொடர்பான 791 வங்கி கணக்குகள் மற்றும் அவற்றில் இருந்த ரூ.121 கோடி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஐ.எஃப்.எஸ் நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 31 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.1.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 680 கிராம் தங்கம், 120 கிராம் வெள்ளி மற்றும் 16 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.” என்றார்.

ரூ.800 கோடி மோசடி செய்த எல்ஃபின்

”எல்ஃபின் நிறுவனம் மூலம் 11,000 முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக புகார் வந்த நிலையில் இதுவரை 2 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிறுவனம் ரூ.800 கோடி மோசடி செய்துள்ளது. நிறுவனத்திற்கு சொந்தமான 37 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு 257 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சோதனை செய்யப்பட்ட இடங்களில் இருந்து ரூ.1.25 லட்சம், ரூ.3.34 கோடி, 400 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எல்ஃபின் நிறுவனத்துக்கு சொந்தமான 42 வங்கிக் கணக்குகளும், அந்நிறுவனம் கிரிப்டோ கரன்சியில் செய்யப்பட்ட முதலீடும் முடக்கப்பட்டுள்ளது” என்று ஐ.ஜி. ஆசியம்மாள் தெரிவித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

பரவும் காய்ச்சல்: தமிழ்நாட்டில் விடுமுறையா? – அமைச்சர் விளக்கம்!

லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்!

+1
1
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *