அரசு அனுமதியின்றி சிலை கூடாது : நீதிமன்றம் எச்சரிக்கை!

தமிழகம்

தமிழக அரசின் அனுமதியின்றி இனி யாரும் சிலை வைக்கக்கூடாது என்றும் அனுமதியின்றி சிலை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில், “அம்மச்சியாபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட தியாகி இமானுவேல் சேகரனின் வெண்கல சிலையை தனிநீதிபதி முறையான அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

சிலை வைக்கப்பட்ட பின் நடைபெற்ற கூட்டத்தில் அனுமதி பெறும்வரை சிலையைத் தகரம் அமைத்து மூடிவைக்க முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவும் முறையாகப் பின்பற்றப்பட்டது. இந்த சூழலில் சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டது ஏற்கத்தக்கதல்ல.

ஆகவே இது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று(நவம்பர் 17) நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வுமுன்பாக விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது மனுதாரர் தரப்பில், “பட்டா இடத்திலேயே சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது தகரம் கொண்டு மூடிவைக்கப்பட்டுள்ள நிலையில், சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டது ஏற்கத்தக்கதல்ல” என வாதிடப்பட்டது.

அரசுத்தரப்பில், “அந்த பகுதியில் ஏராளமான சாதிய மோதல்கள் நிகழ்ந்துள்ளன. அதோடு அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆகவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கூடாது” என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், “அதிகாரிகள் மனுதாரரின் மனுவை நிலுவையில் வைத்திருப்பது ஏன்? இதனால் காவல்துறையினரே சிரமத்திற்கு ஆளாகின்றனர்” என்று தெரிவித்தனர்.

மேலும், அனுமதிபெறும் வரை சிலையைத் திறக்கக்கூடாது. இதற்குப் பொறுப்பேற்று மனுதாரர் தரப்பில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை வருகிற நவம்பர் 24-ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் முறையான அனுமதியின்றி சிலைகள் வைக்கக்கூடாது. அனுமதியின்றி சிலை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டனர்.

மோனிஷா

விஜய் ஹசாரே கோப்பை: தமிழக வீரர் ஹாட்ரிக் சதம்!

புத்திசாலி நாய்: இணையத்தில் வைரலான வீடியோ!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *