“ஊட்டச்சத்து குறைபாட்டில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நான் சமாதானம் அடைய விரும்பவில்லை” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் வகையில் கடந்த ஆண்டு மே 21ஆம் தேதி ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்மூலம் பயன்பெற்ற வருண் (வயது 4), சாய்பா (வயது 2) மற்றும் சாய்திரன் (வயது 2.5 ) ஆகிய குழந்தைகளின் பெற்றோர்களை சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அக்குழந்தைகளின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று (ஆகஸ்ட் 13) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“பல்வேறு மாவட்டங்களுக்கு நான் ஆய்வுப் பணிகளுக்குச் செல்லும்போது, ஓர் அங்கன்வாடி மையத்தில், மிகவும் மெலிந்த ஒரு குழந்தையைப் பார்த்தேன். அதற்குக் காரணம் என்னவென்று கேட்டபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு என்றார்கள்.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நான் சமாதானம் அடைய விரும்பவில்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும் என உடனே தொடங்கப்பட்ட திட்டம்தான் ஊட்டச்சத்தை உறுதிசெய்!” எனப் பதிவிட்டுள்ளார்.
பல்வேறு மாவட்டங்களுக்கு நான் ஆய்வுப் பணிகளுக்குச் செல்லும்போது, ஓர் அங்கன்வாடி மையத்தில், மிகவும் மெலிந்த ஒரு குழந்தையைப் பார்த்தேன். அதற்குக் காரணம் என்னவென்று கேட்டபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு என்றார்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நான்… pic.twitter.com/CG5PIU6Ydm
— M.K.Stalin (@mkstalin) August 13, 2023
மேலும் இந்த பதிவுடன் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட “ஊட்டச்சத்தை உறுதி செய்” என்ற திட்டத்தின் இதுவரையிலான பணிகள் தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அதில், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் மூலம் இதுவரை 6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட 37 இலட்சம் குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 9.3 லட்சம் குழந்தைகள் மிதமான மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை 1,06,916 குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை உணவு அளிக்கப்பட்டுள்ளது. 43,200 குழந்தைகளுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
74,615 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு நிலையிலிருந்து முன்னேறியுள்ளனர். ரூ.8.68 கோடி செலவில் தாய்மார்களுக்கு சத்துப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் பிறவியிலேயே கண்டறியப்பட்ட இருதய நோய், மூளை வளர்ச்சி குறைபாடு, பார்வை குறைபாடு, காது கேளாமை, கால் ஊனம் போன்ற குறைபாடுகளை உடைய 3,038 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்பொழுது அவர்கள் நலமாக உள்ளனர் ” என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா