நம் நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு பி12 பற்றாக்குறை இருக்கிறது. மட்டனில் வைட்டமின் பி12 அதிகம் இருக்கிறது. வைட்டமின் பி12 அதிக சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யும், எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதயப் பிரச்சினை உள்ளவர்கள் எலும்பை ஒட்டி இருக்கும் கரியை எடுத்துக்கொண்டால், இதயத்துக்கு மிகவும் நல்லது. ஒமேகா 3, ஒமேகா 6 அதிகம் இருப்பதால், நல்ல கொழுப்பு அதிகமாக இருக்கும். கெட்ட கொழுப்புகள் இருக்காது. புரதச்சத்து மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கவைக்கும், உடம்பில் சதை வளர உறுதுணையாக இருக்கும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வீக் எண்ட் ஸ்பெஷலாக இந்த ஹைதராபாத் மட்டன் பிரியாணி எடுத்துக்கொள்வது அனைவருக்கும் நல்லது.
என்ன தேவை?
மட்டன்- 400 கிராம்
வெங்காயம் – 300 கிராம்
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய்ப் பொடி, கரம் மசாலா, புதினா, கொத்தமல்லி – தலா 40 கிராம்
பிரிஞ்ஜி இலை – 2
மிளகு – 4
தயிர் – 100 மில்லி
எலுமிச்சை – ஒன்று
ஏலக்காய், கருஞ்சீரகம் – தலா 20 கிராம்
எண்ணெய் – 40 மில்லி
நெய் – 60 மில்லி
உப்பு, பால், குங்குமப்பூ – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
இஞ்சி, பூண்டு இரண்டையும் தோல் நீக்கி அரைத்துக்கொள்ளவும். கொத்தமல்லி, புதினா இலைகளை அரைத்துக்கொள்ளவும். கடாயில், எண்ணெய்விட்டு 100 கிராம் வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும். பாத்திரத்தில் மட்டனை எடுத்து அதோடு மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா, குங்குமப்பூ, எலுமிச்சைச்சாறு, வேகவைத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா பேஸ்ட், எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து, இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
பெரிய கடாயில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதில் இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு லவங்கப்பட்டை, இரண்டு பிரிஞ்ஜி இலை, எண்ணெய் சிறிதளவு, கருஞ்சீரகம், நான்கு மிளகு சேர்க்கவும். இந்தத் தண்ணீரில், தேவைக்கேற்ப கழுவிய பாஸ்மதி அரிசியைப் போட்டு இரண்டு நிமிடங்கள் மட்டும் வேகவிடவும்.
பின்னர் அதிலிருந்து தண்ணீரை வடிகட்டி, அரைப்பங்கு அரிசியைப் பிரித்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
வடிகட்டிய தண்ணீரை அரைப்பங்கு அரிசியில் போட்டு, நன்கு கொதிக்கவிடவும். மட்டன் கலவையை எடுத்து, பிரியாணி செய்யவிருக்கும் பாத்திரத்தில் வைத்து, அரிசியை வேகவைத்த நீரில் சேர்க்கவும். தண்ணீர் ஊற்றுவதால் மட்டன் மிருதுவாகும். பின்பு, இரண்டு நிமிடங்கள் மட்டும் வேகவைத்த அரிசியை, மட்டனுடன் சேர்த்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். கொஞ்சம் பொன்னிற வெங்காயத்தையும், சில சொட்டு குங்குமப்பூ கலந்த பாலையும், இரண்டு ஸ்பூன் நெய்யையும், கரம் மசாலாவையும் சேர்த்து, 25 நிமிடங்கள் மட்டனும் அரிசியும் மிருதுவாகும் வரை வேக வைக்கவும். அடுத்து மிச்சம் இருக்கும் அரிசியைச் சேர்த்து, மீண்டும் பொன்னிற வெங்காயம், சில துளி குங்குமப்பூ பால், கொத்தமல்லி, புதினா, நெய் சேர்த்தால் பிரியாணி ரெடி. பரிமாறும் முன்பு பிரியாணியை நன்கு கிளற வேண்டும். அப்போதுதான் மசாலா நன்கு கலக்கும்.
அட்லீ சுட்ட இட்லி: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: ஜி 20 முடிந்த பிறகு… உதயநிதிக்கு எதிராக ‘ஜி’க்கள் உத்தரவு!