கன்னியாகுமரி அருகே சந்தேகத்தால் மனைவியை கொன்று 10 துண்டுகளாக கூறு போட்டு பேக்கில் மறைத்துக் கொண்டு சென்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மணக்காவலம் பிள்ளை நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (35). கூலி தொழிலாளியான இவருக்கு 30 வயதில் மரிய சத்யா என்ற மனைவி உண்டு.
இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே மரிய சத்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை மாரிமுத்து துன்புறுத்தி வந்துள்ளார். குழந்தைகள் இருவரும் பாளையங்கோட்டையில் விடுதியில் தங்கி படித்துள்ளனர்.
இதற்கிடையே, உறவினர் ஒருவர் அழைப்பின் பேரில் சில நாட்களுக்கு முன்பு, இந்த தம்பதி கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் வந்தனர்.
அங்கு, பால்குளத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்தனர். மாரிமுத்து கூலி வேலைக்கு சென்று வந்தார். இறைச்சி வெட்டும் வேலையும் செய்து வந்தார்.
இங்கு வந்த பின்னரும் இருவருக்கும் தகராறு அடிக்கடி ஏற்பட்டது. நேற்று (டிசம்பர் 19) தகராறு ஏற்பட்ட போது, ஆத்திரமடைந்த மாரிமுத்து திடீரென வீட்டில் இருந்த இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து மனைவியின் தலையை துண்டாக்கினார். பின்னர், அவரின் உடலை 10 துண்டுகளாக வெட்டியவர், உடல் பாகங்களை தண்ணீரில் கழுவினார்.
ஏற்கனவே வீட்டில் இருந்த 3 டிராவல் பேக்குகளில் உடல் பாகங்களை அடைத்து. நேற்று இரவு 9.30 மணியளவில் வெளியே கொண்டு வந்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் கேட்ட போது , என் மனைவி திருந்தவில்லை எனவே வீட்டை காலி செய்ய போகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆட்டோவுக்காக அவர் பேக்குடன் நின்று கொண்டிருந்த நேரத்தில், அந்த பகுதியில் நின்ற நாய் ஒன்று அருகில் வந்து பேக்கை பார்த்து குரைக்க தொடங்கியது.
சிறிது நேரத்தில் வேறு சில நாய்களும் வந்து பேக்கை மோப்பம் பிடித்து குரைத்தன. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் பேக்கை திறந்து பார்த்த போது அதிர்ந்து போனார்கள். உள்ளே மரிய சத்யா துண்டு துண்டாக கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடல் பாகங்கள் இருந்த பேக்குகளை கைப்பற்றி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு ஒப்படைத்தனர்.
மாரிமுத்துவை, அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் அடிக்கடி போனில் பேசிக் கொண்டிருந்ததால், ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மனைவியை கொன்றதாக மாரிமுத்து கூறியுள்ளார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
எல்லா விஞ்ஞானிகளும் இங்கதான் இருக்காங்க… சிங்கிள் சீட் ட்ரோன் ரெடி!
Comments are closed.