பிரிந்து வாழும் மனைவியை அவரது கணவர் காரில் தரதரவென இழுத்துச் சென்ற விவகாரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தகவல்கள் வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை உட்கோட்டம் திருவட்டார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் அணக்கரை உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் அபிஷா, 2021 இல் முதலார் பகுதியை சேர்ந்த டெக்கரேஷன் வேலை செய்து வரும் பெர்லினை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார் அபிஷா. ஆற்றூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்வியியல் கல்லூரியில் பட்டபடிப்பும் படித்து வருகிறார்.
அபிஷா தினமும் அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுவருவது வழக்கம். அப்படி, கடந்த ஜனவரி 3ஆம் தேதி, கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அருவிக்கரை பாலம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது பிரிந்திருந்த கணவரான பெர்லின், ஸ்கூட்டியில் வந்த அபிஷாவை வழிமறித்து சண்டை போட்டுள்ளார்.
இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு வார்த்தைகள் தடித்து போக, பெர்லின் அபிஷாவை தாக்கிவிட்டு ஸ்கூட்டி சாவியை பிடுங்கிக்கொண்டு, காரை ஸ்டார்ட் செய்து புறப்பட்டார்.
அப்போது அபிஷா ஓடிப்போய் ஸ்கூட்டி சாவியை கேட்டு, கார் சாவியை எடுக்க முயற்சித்தபோது, அவரது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே வேகமாக காரை ஓட்டினார் பெர்லின். அப்படியே காரோடு சேர்ந்து அபிஷாவை இழுத்துக் கொண்டே போனார்.
இந்த காட்சியைக் கண்டு அதிர்ந்த அக்கம்பக்க பொதுமக்கள் அபிஷாவை காப்பாற்ற கார் பின்னால் ஓடி சென்று காரை மறித்தனர். அபிஷா தலைக் கவசம் அணிந்திருந்தால் சிறுசிறு காயங்களுடன் உயிர்தப்பினார், இதையடுத்து அப்பகுதி மக்கள் அபிஷாவை குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காருடன் பெர்லினையும் பிடித்து சென்று திருவட்டார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஆனால் திருவட்டார் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் ஜானகி வழக்குபதிவு செய்து, ஸ்டேஷன் பெயிலில் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அனுப்பி வைத்துள்ளார்.
இதையறிந்த அபிஷாவின் தந்தை ராஜசேகர் தக்கலை டிஎஸ்பியிடம் புகார் கொடுத்து, விசாரணை நடைபெற்று வருவதாக கன்னியாகுமரி மாவட்ட போலீசார் தரப்பில் கூறுகிறார்கள்.
போலீஸ் நடவடிக்கை எடுக்காததை அறிந்த அந்த பகுதி மக்கள் அபிஷாவை பெர்லின் காரில் இழுத்து செல்லும் சிசிடிவி காட்சியை வெளியிட்டு பரவவிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தைப் பற்றியும் இன்ஸ்பெக்டர் மீதான குற்றச் சாட்டுகளைப் பற்றியும் திருவட்டார் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் ஜானகியைத் தொடர்புகொண்டு கேட்டோம்.
“அதையெல்லாம் சொல்லமுடியாது. தற்போது விசாரணையில் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக கேட்டுக்குங்க” என சத்தமாக பேசிவிட்டு லைனைத் துண்டித்தார் இன்ஸ்பெக்டர்.
“ஒரு பெண்ணை நடுரோட்டில் காரோடு சேர்த்து இழுத்துப் போகும் காட்சியைப் பார்த்தும் பணத்துக்கு ஆசைப்பட்டு குற்றவாளியை காப்பாற்றுகிறார்கள் சில காவல் அதிகாரிகள்” என்கிறார்கள் போலீஸுக்குள்ளேயே சிலர்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
-வணங்காமுடி
விலகிய வேகத்தில் புதிய கட்சியில் சேர்ந்த அம்பத்தி ராயுடு : ஏன்?