ராமநாதபுரம் அருகே கடற்கரை பகுதியில் கிடந்த மனித மண்டை ஓடுகளால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி கடற்கரை பகுதியில் கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கடல் அரிப்பும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ரோஜ்மா நகர் கடற்கரை ஓரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மக்களால் பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர் கடல் அரிப்பால் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் மண்டை ஓடுகளும், எலும்புக்கூடுகளும் வெளியே தெரிய தொடங்கியுள்ளது. ராட்சத கடல் அலைகளால் மனித எலும்புக்கூடுகள் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் அப்பகுதி மீனவ மக்கள் கடும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
தொடர் கடல் அரிப்பால், மீனவர்கள் தங்கள் படகுகளை கரையோரங்களில் நிறுத்திவைக்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அது மட்டுமன்றி கடல் அரிப்பால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசியுள்ள அந்தப் பகுதி மீனவர்கள், “ராமநாதபுரம் மிக நீண்ட நெடிய கடற்கரையைக்கொண்ட மாவட்டமாகும். மன்னார்வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி ஆகிய இரண்டு கடல் பகுதிகளை உள்ளடக்கியது. இதில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இயற்கையாகவே கடல் நீரோட்டம் அதிகம் காணப்படும்.
வாலிநோக்கம் முதல் கீழமுந்தல், மேலமுந்தல், மாரியூர் வரையிலான கடற்கரையை ஒட்டி ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே மன்னார் வளைகுடாவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த சாயல்குடி, ரோஜ்மா நகர், வாலிநோக்கம் கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் நீரோட்டம் மற்றும் சீற்றம் அதிகமாக உள்ளது.
வாலிநோக்கம் முதல் மாரியூர் வரையிலான கடற்கரை பகுதிகளில் சவுக்கு மரங்கள் அதிக அளவில் இல்லாததும் கடல் அரிப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம். எனவே, கடற்கரை பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் சவுக்கு மர கன்றுகள், பனை மரங்களை நடுவதற்கும், தூண்டில் வளைவு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்திலும் இது குறித்து மனு அளித்து வருகிறோம். மேலும் மீனவர் மாநாட்டின்போது முதலமைச்சரிடமும், மீன்வளத்துறை அமைச்சரிடமும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கடல் அரிப்பால் மீனவ கிராமங்கள் மொத்தமாக அழியும் நிலை ஏற்படும்” என்கின்றனர்.
ராஜ்
போருக்கு மத்தியில் உக்ரைன் அகதிகளுக்கு உதவும் ரஷ்ய மக்கள்!
தமிழ்நாட்டில் 1.50 இலட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!