ஊறுகாய் என்றாலே அனைவருக்கும் நாக்கில் சப்புக் கொட்டும். அந்த வகையில், ஊறுகாய்கள் பல்வேறு சுவைகளில் வந்து விட்டன. ஆனால் தற்போது பலரும் ஊறுகாய் போடத் தெரியாமல் கடைகளில் விற்பதை வாங்கி சாப்பிடுகிறோம்.
ஆனால், ஊறுகாய் செய்வது மிகவும் எளிது. பக்குவமும், அளவும் தான் மிகவும் முக்கியம். அதைத் தெரிந்துகொண்டால் நீங்களும் ஊறுகாய் மாஸ்டராகிவிடலாம். அதற்கு இந்த செய்முறை உதவும்.
என்ன தேவை
பச்சை மிளகாய் – 200 கிராம் (காம்பை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
இஞ்சித் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
வறுத்துப் பொடி செய்துகொள்ள…
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
பச்சரிசி – ஒரு டேபிள்ஸ்பூன்
எப்படி செய்வது
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தனித்தனியே வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது நேரம் புரட்டவும். பச்சை மிளகாய் நீரெல்லாம் இறங்கும்.
பிறகு எலுமிச்சைச்சாறு விட்டு, பொடித்த பொடி சேர்த்து புரட்டி அடுப்பை நிறுத்தி இறக்கி சாதத்துக்குத் தொட்டு சாப்பிடவும். ஈரம் இல்லாத, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்து ஒரு வாரம் வரை வைத்திருந்து சுவைக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…