ஒவ்வொரு பண்டிகைக்கும் குறிப்பிட்ட சில பலகாரங்களை விசேஷமாகச் செய்வது வழக்கம். அந்த வரிசையில் விநாயகருக்கான ஸ்பெஷல் பலகாரம் மோதகம். வழக்கமான மோதகமாக இல்லாமல் சத்துகள் நிறைந்த இந்த வெஜிடபிள் மோதகத்தைச் செய்து விநாயகர் சதுர்த்தியை அசத்தலாம்.
என்ன தேவை?
இடியாப்ப மாவு (அ) அரிசி மாவு – ஒரு கப்
உப்பு – 2 சிட்டிகை
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
வெந்நீர் – தேவையான அளவு
பூரணம் செய்ய…
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, சீரகம், கடுகு – தலா கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
துருவிய கேரட், முட்டைகோஸ் – தலா 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பாசிப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பச்சை மிளகாயுடன் கறிவேப்பிலை சேர்த்து நைஸாக இடிக்கவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். அதனுடன் இடித்த பச்சை மிளகாய் – கறிவேப்பிலை, கேரட், முட்டைகோஸ் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். பிறகு ஊறவைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வேகவிடவும். காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இடியாப்ப மாவுடன் எண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெந்நீரைச் சேர்த்துப் பிசையவும். மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, பூரி அளவுக்குக் கையால் தட்டவும். ஒரு பூரியின் மீது சிறிதளவு பூரணத்தை வைத்து, மேலே மற்றொரு பூரியால் மூடி ஓரங்களை ஒட்டவும். குக்கி கட்டரால் ஓரங்களை விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும். இதை ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.
டெல்லி காவேரியால் கலகம்: அப்டேட் குமாரு!
“இந்தியா கூட்டணி வென்றால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்” – ஸ்டாலின்