கிச்சன் கீர்த்தனா: நன்னாரி சர்பத்

தமிழகம்

கோடைக்காலத்தில் அனைவரும் விரும்பி பருகும் பானங்களில் ஒன்று நன்னாரி சர்பத். வெயில் தொடங்கும்போதே நன்னாரி சர்பத் கடைகள் களைக்கட்ட ஆரம்பித்துவிடும். ஆனால், இப்போது சுத்தமான நன்னாரி சர்பத் கிடைப்பது அரிதாகி விட்டது.

செயற்கை நிறமூட்டிகள் மற்றும் ப்ரெசர்வேடிவ்ஸ் சேர்க்கப்பட்டவை மட்டுமே கிடைக்கின்றன. அவற்றை அருந்தும்போது நன்னாரியினால் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காது.

மாறாக இதில் கலந்துள்ள நிறமூட்டிகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதைத் தவிர்க்க நன்னாரி வேரை வைத்து இயற்கையான முறையில் வீட்டிலேயே இந்த சர்பத் செய்து சுவைக்கலாம்.

என்ன தேவை?

நன்னாரி வேர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) – 2 கப்
சர்க்கரை – ஒரு கப்
எலுமிச்சைப் பழம் – 2
சிவப்பு ஃபுட் கலர் – 2 சிட்டிகை

எப்படிச் செய்வது?

நன்னாரி வேரை, தண்ணீரில் கழுவி எடுத்து, பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீரில் 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, இந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்து பாத்திரத்தை மூடிவைக்கவும். சர்க்கரையை வேறொரு பாத்திரத்தில் சேர்த்து, ஒரு கரண்டி தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும்.

சர்க்கரை கரைந்து, கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். சிவப்பு ஃபுட் கலர் சேர்த்துக் கலக்கவும். நன்கு ஆறியதும் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நன்னாரி வேர் கொதித்த தண்ணீரை வடிகட்டி, இத்துடன் சேர்த்துக் கலக்கவும். இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவையானபோது, இந்த ஜூஸை கால் கப் எடுத்து முக்கால் கப் குளிர்ந்த நீர் சேர்த்து அருந்தலாம். துருவிய இஞ்சி சிறிதளவு சேர்ப்பது, கூடுதல் சுவை தரும்.

கிச்சன் கீர்த்தனா: பன்னா

கிச்சன் கீர்த்தனா: தண்டாய்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *