குழம்புக்கு பதிலாக சில கிரேவிகளை சாதத்தோடு சேர்ந்து பிசைந்து சாப்பிட்டால் சுவையில் அசத்தும். அப்படிப்பட்டதுதான் ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த எள் கார கறி. அனைவருக்கும் ஏற்ற இந்த கிரேவி, ஆரோக்கியமானதும்கூட.
என்ன தேவை?
வெங்காயம் – 3 How to Make Ellu Kuzhambu
தக்காளி – 2
பூண்டு – 10 பல்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள், தனியாத்தூள் – தலா 2 டீஸ்பூன்
கறுப்பு எள் – 2 டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
புளிக்கரைசல் – 50 கிராம்
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெங்காயத்தை தோல் நீக்கி, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும், தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும். கறுப்பு எள்ளை கடாயில் போட்டு வறுத்து, பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் வெந்தயம் சேர்க்கவும். அது பொரிந்தவுடன் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து… தக்காளியையும் சேர்த்துக் கலக்கவும். பின்னர் இதில் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்கவிடவும். கலவை நன்றாக கொதித்து, பச்சை வாசனை போன பின் கெட்டியாக வரும்போது, வறுத்து பொடித்த எள்ளைத் தூவி கிளறி, உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இதன் மேல் கொத்தமல்லி தூவி, சாதத்தோடு பரிமாறவும்.