how to increase tasmac income

டாஸ்மாக் டார்கெட்… அச்சீவ் செய்ய இதோ ஆலோசனைகள்!

தமிழகம்

டாஸ்மாக் வருமானத்தை அடுத்த ஆண்டு 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதை கிண்டல் செய்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சில ஆலோசனைகள் வழங்கி இப்படி செய்தால் வருமானத்தை அதிகரிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் கடந்த மார்ச் 20 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து நிதித்துறை செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான வருமானத்தை எப்படியெல்லாம் உயர்த்தலாம் என்று பேசியிருந்தார்.

அதில், டாஸ்மாக் மூலம் இந்த ஆண்டு 45 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு 50 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தமிழ்நாட்டில், கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும், விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு சரியான கொள்முதல் விலையைக் கொடுக்க வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும், நியாய விலைக் கடைகளில் தரமான பொருட்களை வழங்க வேண்டும், சீரான தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மக்களிடத்தில் பல எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்திருப்பது தொடர்பாகக் கிண்டலான பதிவுகள் வாட்ஸ் அப்-ல் பரவி வருகிறது.

குறிப்பாக டாஸ்மாக் வருமானத்தை உயர்த்துவதற்கு 9 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆலோசனைகள் என்ன என்று பார்த்திடலாம்….

1.மாதம் 30 குவார்ட்டர் வாங்கும் குடும்பத்தினருக்கு மட்டும்தான் மகளிர் உரிமைத்தொகை ₹1000 வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.

2.குறைந்தபட்சம் மாதம் 15 குவார்ட்டராவது வாங்கும் வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும். சரக்கு வாங்காத வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அரசாணை வெளியிடலாம்.

3.அனைத்து ரேசன் அட்டைகளையும் அருகிலுள்ள டாஸ்மாக் கடையில் இணைத்தால் தான் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.

4.வருடத்திற்கு ஒரு முறையாவது டிரங்க் அன் டிரைவ் அபராதம் செலுத்தியோருக்கு மட்டுமே ஆர்டிஓ வில் புதிய வாகனம் பதிவு செய்ய முடியும் மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க முடியும் என்று அறிவிக்கலாம்.

5.அல்ரெடி தினமும் ஒரு குவார்ட்டர் அடிப்பவர்கள் , ஞாயிற்றுக்கிழமை மட்டும் கட்டாயமாக 2 குவார்ட்டர் அடிக்க வேண்டும் என்று ஆவண செய்ய வேண்டும்.

6.தினமும் ஒரு குவார்ட்டர் அல்லது பியர் வாங்கும் இளைஞர்களுக்கு டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் 7.5% தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

7.ஒவ்வொரு குவார்ட்டருக்கும் இலவசமாக ஒரு அவித்த முட்டை வழங்கலாம்.

8.ஸ்விக்கி, ஸோமேட்டோ போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுடன் இணைந்து வீடுகளுக்கே சரக்கு சேவை வழங்கலாம்.

9.குடிமகன்களுக்கு வாந்தி ஏற்படுவதை தவிர்க்க ரேசன் கடைகள் மூலமாக எலுமிச்சங்காய் ஊறுகாய் வழங்கலாம்.

இவற்றைப் பரிசீலித்து நிறைவேற்றினால் அரசாங்கத்தின் டார்கெட்டான 50,000 கோடி ரூபாயை மிக விரைவில் தொட்டுவிடலாம்.

மோனிஷா

கலைஞர் நூற்றாண்டு விழா: ஜூன் 3ல் மாநாடு!

கொரோனாவிலிருந்து மீண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *