தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள யானைகள் அதிகப்படியான மனஅழுத்தங்களுக்கு ஆளாவதால் அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
கோவை வால்பாறை பகுதியைச் சுற்றிவரும் 69 யானைகளை ஆறுமாத காலமாக பின்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், யானைகள் விரட்டப்படும்போது, அவை பயந்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற அச்சத்தால் ஓடுவதால், கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனிதர்களால் துரத்தப்படும் யானைகளின் 294 சாண மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவை கடும் மனஅழுத்தத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போதுமான உணவு இல்லாமல் போனதால்தான் யானைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படும்.
யானைகள் உயிருக்கு பயந்து ஓடும் சம்பவங்களின்போது, குட்டி யானைகளின் மனஅழுத்தம் நூறு சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். வளர்ந்த ஆண் யானைகள் நாற்பது சதவீதம் உளைச்சலுடன் இருக்கின்றன.
தொடர்ந்து அச்ச உணர்வில் இருக்கும் பெண் யானைகளுக்கு இனப்பெருக்கக் காலத்தில் சுரக்க வேண்டிய பாலுணர்வு திரவம் சுரப்பதில்லை. இந்த திரவம் சுரந்த பெண் யானையைத்தான் ஆண் யானை தேடிவரும். திரவம் சுரக்காத பெண் யானைகள் இனப்பெருக்கம் செய்யமுடியாது.
இப்படி யானைகளின் வாழ்க்கை முறை மிகவும் சிக்கல் நிறைந்தது. அதுவும் கோயில்களில் குழந்தைகள் போல வளர்க்கப்படும் யானைகளும் வெளியே சொல்ல முடியாத மன அழுத்தத்தில்தான் இருப்பதாக பல ஆண்டுகளாக சொல்லப்படுகிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டு கோவில் யானைகள் கடும் அட்டகாசத்தில் ஈடுட்டன. அப்போது, யானைகள் கடும் மன அழுத்தத்தில் இருப்பதை மருத்துவக்குழுவினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, யானைகளுக்கு மன அழுத்தத்தை குறைக்கவே, கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கோவில் யானைகளுக்கு முதுமலையில் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது.
யானைகளின் இனப்பெருக்க காலமான நவம்பர் டிசம்பர் மாதங்களில் ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் நடத்தப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் யானைகள் முகாம் தடையில்லாமல் நடத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த முகாமை நடத்துவதில்லை.
இதுதொடர்பாக நமது மின்னம்பலம் தளத்தில், “யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம்: அரசின் நிலை என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் நேற்று திருச்செந்தூர் கோவில் யானை தெய்வாணை தாக்கி பாகன் உட்பட இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கோவில் யானைகளின் மன அழுத்தத்தை கருத்தில் கொண்டு அவற்றுக்குரிய புத்துணர்வு முகாமை மீண்டும் நடத்த அரசு முன் வர வேண்டுமென்று திமுக அரசுக்கு வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
இந்திக்கு மாறிய எல்.ஐ.சி வலைத்தளம்… இந்தியர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் : ஸ்டாலின் கண்டனம்!
எங்கு பார்த்தாலும் லஞ்சம்! – டெல்லி கிரிக்கெட் சங்கம் இப்படியா?