“என் வீட்டுக் குழந்தைகள் சரியான சாப்பாடு எடுத்துக் கொள்வதில்லை. சாப்பிடுவதற்கு கட்டாயப்படுத்த வேண்டியுள்ளது. அவர்களை சாப்பிட வைப்பது எப்படி?” – பெரும்பாலான இளம் தாய்மார்களின் கவலை தோய்ந்த கேள்வியாக இது இருக்கிறது.
இதுகுறித்து குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகரிடம் விசாரித்தோம்… “உணவு விஷயத்தில் பல குழந்தைகளும் இப்படித்தான் இருக்கிறார்கள். இது பொதுவான ஒன்றுதான். எனவே கவலைப்படுவதை நிறுத்துங்கள். சில விஷயங்களில் மட்டும் கவனமாக இருங்கள்.
குழந்தைக்கு எக்காரணம் கொண்டும் கட்டாயப்படுத்தி உணவளிக்காதீர்கள். எந்த அளவுக்கு வற்புறுத்துகிறோமோ, அந்த அளவுக்கு குழந்தைகளுக்கு அந்த உணவின் மீது வெறுப்பு அதிகரிக்கும்.
முதல் விஷயம், குழந்தைகளின் சாப்பாட்டு நேரம் சந்தோஷ நேரமாக இருக்க வேண்டும். டிவி போட்டுவிட்டு, செல்போனை கையில் கொடுத்துவிட்டெல்லாம் சாப்பிட வைக்காமல், டைனிங் டேபிளில் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டு வாருங்கள். அதாவது சாப்பாட்டு நேரம் என்பது குடும்பத்தார் அனைவரும் ஒன்றுகூடும் மகிழ்ச்சியான நேரம் என்பதை குழந்தைகளுக்குப் பதிய வையுங்கள்.
நீங்கள் சாப்பிடும் உணவையே குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். ஒருவேளை அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் வெரைட்டியை அறிமுகப்படுத்துங்கள். சில நேரங்களில் புதிய உணவுகளை அவர்கள் தவிர்த்தாலும், வெரைட்டி இருக்கும்போது சாப்பிட முயற்சியும் செய்வார்கள். ஆனால், அந்த உணவுகள் அவர்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும்.
கிரேவியாகவோ, குழம்பாகவோ சாப்பிடுவதுதான் சரி என்றில்லை. சில குழந்தைகள் டிரை வகை (Dry) உணவுகளை விரும்புவார்கள். உதாரணத்துக்கு காய்கறிகள் சேர்த்துச் செய்த சாம்பாரை சாதத்தில் பிசைந்து சாப்பிட குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை என்றால், சாம்பாரில் உள்ள புரதம் மற்றும் இதர சத்துகளை வேறு எப்படிக் கொடுக்க முடியும் என்று யோசிக்கலாம்.
வெறும் சாதமாகக் கொடுப்பதற்கு பதில் அதை சத்தான புலாவாகச் செய்து கொடுக்கவும். அரிசியும் பருப்பும் சேர்த்து கிச்சடி மாதிரி செய்து கொடுக்கலாம். சன்னாவும் காய்கறிகளும் சேர்த்து புலாவ் செய்து தரலாம்.
குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும்போது நீங்கள் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். டென்ஷன் ஆக வேண்டாம். அரைமணி நேரமானாலும் அவர்கள் உணவை ரசித்து, நிதானமாகச் சாப்பிட அனுமதியுங்கள். டைனிங் டேபிளில் குடும்பமாக அமர்ந்து சாப்பிடும்போது, குழந்தைகள் அவர்களுக்குப் பிடித்ததை தாமாக எடுத்துச் சாப்பிடவும் அனுமதியுங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாகப் பரிமாறுங்கள். முதலிலேயே அதிக அளவு வைத்தால் குழந்தைகள் மலைத்துப் போய், அதை ஒதுக்க நினைக்கலாம். உணவின் தன்மை, சுவை, மணம், நிறம் என எல்லாவற்றையும் உணர்ந்து சாப்பிட குழந்தைகளைப் பழக்க வேண்டும்.
பழங்களை வித்தியாசமான வடிவங்களில் வெட்டிக் கொடுப்பது, வெவ்வேறு நிறங்களில் உள்ள இரண்டு, மூன்று பழங்களைக் கலந்து கொடுப்பது, கார்ட்டூன் வடிவில் அலங்கரித்துக் கொடுப்பது என்றெல்லாம் முயற்சி செய்யலாம்.
தானியங்கள், பருப்புகள், பால், பழங்கள் மற்றும் நட்ஸ், அசைவத்தில் மீன், முட்டை என எல்லாம் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பால் குடிக்க அடம்பிடிக்கிற குழந்தைகளுக்கு தயிராகக் கொடுக்கலாம். தயிரும் பிடிக்காத குழந்தைகளுக்கு பிரெட்டில் சீஸ் தடவிக் கொடுக்கலாம். பனீர் கொடுக்கலாம்.
ஒவ்வொரு குழந்தையின் பசி உணர்வும் வேறுபடும். எல்லா நாட்களிலும் பசி உணர்வானது ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றும் அவசியமில்லை. குழந்தைகள் வளர வளர அவர்களது சுவை உணர்வும் தேர்வும்கூட மாற ஆரம்பிக்கலாம். உங்கள் குழந்தைகள் ஆக்டிவ்வாக இருந்தால் அவர்கள் உடல்நலம் குறித்து கவலை கொள்ள வேண்டாம்.
இதைத் தாண்டி குழந்தைகள் ரொம்ப குறைவாகச் சாப்பிட்டால் மருத்துவர் அல்லது டயட்டீஷியனிடம் ஆலோசனை பெறலாம். வயதுக்கேற்ற எடையும் உயரமும் இல்லை என்றால் மட்டுமே கவலைப்பட வேண்டும். மற்றபடி வளர்ச்சி சீராக இருக்கும்போது வேறு கவலை தேவையில்லை. காலப்போக்கில் இது தானாகச் சரியாகிவிடும்” என்று விளக்கமாகப் பதில் அளித்தார்.
தமிழ் அலுவல் மொழி: ஸ்டாலினுக்கு சந்திரசூட் பதில்!
டிஜிட்டல் திண்ணை: திமுகதான் வெல்லும்… அமித் ஷாவிடம் அண்ணாமலை கொடுத்த ஃபைல்!