உற்சாகமான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

சத்குரு

வளர்ச்சி, வெற்றி, ஆனந்தம் மற்றும் நிறைவான வாழ்க்கைக்கான அடிப்படைகளை எடுத்துரைக்கும்போது, ஒவ்வொருவரும், தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும், அவரவர் திறமைக்கேற்ப அவரின் முழுத்திறனுக்கு சிறப்பாக செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை சத்குரு விளக்குகிறார்.

மனிதர்கள் கையிலிருக்கும் சாத்தியங்களை வைத்துப் பார்க்கும்போது, வாழ்க்கை மிகவும் குறுகிய காலம் கொண்டது. தான் யாரென்பதை முழு ஆழத்திலும் முழுப் பரிமாணத்திலும் உணர விழையாத மனிதர்களுக்கும், துயரத்திலும் மனக்கவலையிலும் உழலும் மனிதர்களுக்கும் மட்டும்தான் வாழ்க்கை நீண்டதாக இருக்கிறது. இதற்குக் காரணம், நேரம் என்பது பிற விஷயங்களை சார்ந்த ஓர் அனுபவமாக இருக்கிறது. 

உங்களை நீங்கள் உயிரோட்டமாக, உற்சாகமாக, ஆனந்தமாக வைத்துக்கொண்டால், இது மிகக் குறுகிய கால வாழ்க்கை. நேற்று உங்களால் இயன்றவரை நீங்கள் சிறப்பாக செயல்பட்டிருந்த பட்சத்தில், கடந்தகாலத்தில் வாழ்வதில் அர்த்தமில்லை. முக்கியமானது என்னவென்றால், நேற்று நீங்கள் எதை உங்கள் திறமையின் உச்சம் என்று கருதினீர்களோ, அது இன்று உங்களுக்கு போதுமானதாக இருக்கக்கூடாது. இன்று நீங்கள் செய்வது அதைவிட பன்மடங்கு மேலானதாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் வளர்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் திறமையிலும் புத்திசாலித்தனத்திலும் சிறந்தது வெளிப்படும் விதமாக நீங்கள் செயல்பட்டால், ஒவ்வொரு நாளும் வாய்ப்புக்களின் வசந்தமாக வெடிக்கும். நீங்கள் வேகமாக வண்டி ஓட்டிக்கொண்டு செல்பவரென்றால், திரும்பிப் பார்க்க நேரமிருக்காது. நின்றுகொண்டிருக்கும் வண்டியில் இருப்பவர்கள் தாம், வண்டியின் கண்ணாடியில் பின்னால் இருப்பதையே பார்த்துக்கொண்டு இருப்பார்கள், ஏனென்றால் அவர்கள் எங்கும் போகவில்லை. நேற்றின்மீது போஸ்ட்-மார்ட்டம் செய்வதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. 

நாளையை உருவாக்குவது தான் முக்கியமானது. உற்சாகமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கிட, நீங்கள் உங்கள் உச்சத்தில் இருக்கவேண்டும். வளர்ச்சி என்றால், நீங்கள் விரும்பும் விதமாக உங்களை செய்துகொள்வது. நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்பது நீங்கள் முதிர்ச்சியடையும் போது மாறக்கூடும். உங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகளைப் பொருத்தவரை உச்சநிலைகள் என்னவென்று நிர்ணயம் செய்யுங்கள். அதுதான் நீங்கள் அடைய வேண்டியது.

நீங்கள் வேறொருவரை விட மேலானவராக இருக்கவேண்டாம், ஆனால் உங்களால் இயன்றதைவிட எந்தவிதத்திலும் நீங்கள் குறைவாக இருக்கக்கூடாது. உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தமிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், உங்கள் உச்சத்தில் இருக்கவேண்டும் – அதைவிடக் குறைவான எந்த நிலையில் இருந்தாலும் உங்கள் வாழ்க்கை வீணானதுதான். நீங்கள் உற்சாகம் பொங்க வாழ்ந்தால், வாழ்க்கை அற்புதமானது. நீங்கள் பாதி உயிராக இருந்தால், எல்லாம் துயரமானது. ஒருவிதத்தில், இது நரகத்திற்குத் தயார் செய்கிறது. உங்களை நீங்கள் அற்புதமாக செய்துகொண்டால், நீங்கள் எந்த நரகத்தில் இருந்தாலும் நன்றாகவே இருப்பீர்கள்.

இல்லாவிடில் நீங்கள் சொர்க்கத்தில் இருந்தாலும் அதை நரகமாக்கிக் கொள்வீர்கள். ஒரு எதிர்காலத்தை உருவாக்க விரும்பினால், உங்கள் கடந்தகாலத்தை ஒரு சுமையாக இல்லாமல் படிக்கல்லாகப் பயன்படுத்துவது முக்கியமானது. உங்கள் கடந்தகாலம் எந்த அளவு அதிகத் துயரமானதாக இருந்ததோ,

அந்த அளவு நீங்கள் பிறரைவிட சீக்கிரமாக அனுபவ அறிவு நிறைந்தவராகவும் வளர்ந்தவராகவும் மாறவேண்டும். நமக்கு நேரும் விஷயங்களால், ஒன்று நாம் அறிவார்ந்த மனிதராக மாற முடியும், அல்லது அதனால் காயப்பட முடியும். இதுதான் நமக்கு இருக்கும் இரண்டே வாய்ப்புகள். உங்களுக்கு தீங்கு எதுவும் நிகழக்கூடாதென்று எதிர்பார்த்து ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொள்ளாதீர்கள் – வாழ்க்கை அப்படி வேலை செய்யாது. உங்கள் வாழ்க்கையில் என்ன நிகழ்ந்தாலும், அதை உங்களால் ஒரு பொக்கிஷமாக மாற்றிக்கொள்ள முடியும்.

ஈஷா யோகா மையத்தை நாங்கள் நிறுவ ஆரம்பித்தபோது, இது ஊரில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் எங்களைச் சுற்றிக் கூட ஆரம்பித்தார்கள், ஊருக்குள் அதிக தாக்கம் ஏற்படுத்தக்கூடிய சில குடும்பங்களுக்கு இது பிடிக்கவில்லை. அவர்கள் ஒன்றுசேர்ந்து, சில நூறு பேரை அழைத்து வந்து யோகா மையத்தைத் தரைமட்டமாக்கிடத் திட்டமிட்டனர். ஆனால் அனுபவம்மிக்க மூத்தவர் ஒருவர், “யாருடன் விளையாடுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை. 

அவன்மீது நீங்கள் கற்களை வீசினால் அதை வைத்துக் கட்டிடமொன்றை எழுப்பிவிடுவான். அந்தத் தவறை செய்யாதீர்கள்.” என்றார். வாழ்க்கை உங்கள் மீது என்ன வீசுகிறது என்பதும், உங்கள் வழியில் எப்படிப்பட்ட சூழ்நிலைகள் எதிர்ப்படுகின்றன என்பதும் எப்போதுமே உங்கள் கைகளில் இல்லை. ஆனால் அதை வைத்து என்ன செய்கிறீர்கள் என்பது எப்போதும் உங்கள் கைகளில்தான் உள்ளது.

உங்கள் வாழ்க்கையில் இதைக் கையிலெடுத்துக் கொள்ளுங்கள் – யார் என்ன சொன்னாலும் சரி, வாழ்க்கை உங்களுக்கு என்ன செய்தாலும் சரி, உலகம் உங்களை என்ன செய்தாலும் சரி, அதை நல்வாழ்வாக மாற்றிக்கொள்ளுங்கள். அப்படிச் செய்வதற்கு உங்களுக்கு சமநிலை தேவை, உங்கள் உச்சநிலையில் நீங்கள் இயங்குவதும் தேவை. பாரபட்சமின்றி, யாராக இருந்தாலும், நீங்கள் என்ன செய்தாலும் – உங்களுடைய ஆற்றலின் உச்சத்தையே எப்போதும் வழங்கிடுங்கள். 

எல்லோரையும் எல்லாவற்றையும் அதே தீவிரத்துடன், அதே ஈடுபாட்டுடன் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். தேர்வுசெய்து ஈடுபடுவது என்றால், பாதி உயிராக இருப்பது என்று அர்த்தம். முழுவீச்சில் இயங்கும் ஒரு உயிராக முதிரவேண்டும் என்றால், உங்கள் திறமையின் உச்சநிலையில் இயங்கிட எப்போதும் முயற்சியுங்கள், நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் சிறப்பாகச் செய்யுங்கள்.

துரதிர்ஷ்டவசமாக, மனிதகுலத்தின் 90 சதவிகிதத்தினர் தங்கள் முழுத்திறனுக்கு மிகவும் குறைவாகவே இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு, யாரோ ஒருவர் ஏதோ ஒன்று சொல்லிவிட்டார்கள் அல்லது செய்துவிட்டார்கள் என்பது ஓரளவு காரணம், அல்லது யாரோ ஒருவர் ஏதாவது நினைத்துவிடுவார்களோ என்ற பயமும் காரணம். இதற்கு அர்த்தம், நீங்கள் பிறர் மனதிற்குள் நுழைகிறீர்கள் என்பதுதான் – அது இருப்பதற்கு மிகவும் மோசமான இடம்! 

எவர் என்ன நினைத்தாலும், என்ன செய்தாலும், உங்கள் வழியில் என்ன வந்தாலும், அதை உங்கள் நல்வாழ்விற்கானதாக மாற்றிடக் கற்றுக்கொள்ளுங்கள். மனிதர்கள் கவனம் செலுத்தி ஒரு பிரச்சனையின் மூலம் என்னவென்பதைப் பார்த்தபோது, அதுதான் அதற்குத் தீர்வும் என்பதை உணர்ந்தார்கள். அதனால் விஷங்கள் குணமாக்கும் மருந்துகளாக மாறியுள்ளன.

கன்னடத்தில் ஒரு பழமொழி உள்ளது. யாரோ ஒருவர் ஏதாவது தவறு செய்து பிறர் அதைப் பற்றிப் பேசினால், அதன் எதிர்மறையான தாக்கம் தவறு செய்தவர்களை விட அதைப் பற்றி பேசியவர்களைத் தான் அதிகம் பாதிக்கும். அதனால் உங்களைப் பற்றி பேசுபவர்கள் உங்கள் சுமைகளை சுமந்துகொள்ளட்டும். யாரோ ஒருவர் உங்களைத் திட்டினால், அவர்கள் வாயில்தான் மாசுபடிகிறது, அது உங்கள் பிரச்சனை கிடையாது. இன்னொருவர் சொல்வதும் செய்வதும் சிந்திப்பதும் உங்களை பாதிக்கக்கூடாது. 

உங்கள் சிறந்ததையே நீங்கள் எப்போதும் கொடுக்கிறீர்கள் என்றால், அவர்கள் என்ன சொன்னாலும் அதை உங்களால் ஊடுறுவிப் பார்க்கமுடியும். அதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதை உங்களுக்கான ஆலோசனையாக எடுத்துக்கொள்ளலாம், மற்றதை விட்டுவிடலாம்.

உங்கள் ஆற்றலின் உச்சத்தைவிடக் குறைவானதை நீங்கள் கொடுக்கும்போது உங்களைப் பற்றி யாராவது ஏதாவது சொன்னால், நீங்கள் யாரென்று குழம்பிப்போவீர்கள். அப்படியானால் நீங்கள் யாரென்பதை நிரந்தமாக உறுதிப்படுத்த வேண்டுமென்று நான் சொல்லவில்லை. வளர்ச்சி என்பது தொடர்ந்து நடக்கும் ஒரு செயல்முறை. உச்சபட்ச சாத்தியமான நிலைக்கு உங்களை படிப்படியாக உருவாக்கிடுவதே வளர்ச்சி. பலர் எந்தவொரு நிலையிலும் நிலையாய் இருப்பதில்லை, அதாவது ஒரு க்ஷணம் அற்புதமாக இருக்கிறார்கள், அடுத்த க்ஷணம் அசிங்கமாக இருக்கிறார்கள். அதற்கு பதிலாக, உங்களுக்கு இப்போது உச்சநிலை என்னவென்று நிர்ணயித்து, அதை அடைவதற்காக தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கைக்குள் இதைக் கொண்டுவாருங்கள் – எல்லாவற்றிற்கும், துளியும் குறையாமல் உங்கள் சிறந்ததையே கொடுங்கள்.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்… 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிவகார்த்திகேயன் தந்த பரிசு! : ஜீவி பிரகாஷ் நெகிழ்ச்சி

விருநகர் பட்டாசு ஆலையில் ஸ்டாலின் கள ஆய்வு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *