உணவு வீணாக்கப்படுவது என்பது உலகளவில் மிகவும் முக்கியமான பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. உலக அளவில் ஓராண்டுக்கு 1.3 பில்லியன் டன் உணவு வீணாக்கப்படுவதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாக்கப்படுகிறது. உணவை வீணாக்காமல் பயன்படுத்தவும், உணவுப்பொருள்களைப் பயனுள்ளதாக மாற்றவும் சில ஆலோசனைகள்…
வீட்டுக்குத் தேவையான அளவு மட்டுமே காய்கறி, பழங்கள், மளிகை சாமான்களை வாங்கி வைத்தால் போதுமானது. கூடுதலாக கையிருப்பு வைக்கும்போது அவற்றை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. ஒரு வாரத்துக்கு சமையலுக்குத் தேவையானவற்றை வாங்கி வைக்கிறீர்கள் என்றால், திட்டமிட்டபடி அந்த உணவுகளைத் தயாரித்துவிட வேண்டும்.
கெட்டுப் போகும் நிலையில் இருக்கும் காய்கறிகள், பழங்கள் மற்றும் காலாவதி தேதி நெருங்கும் உணவுப்பொருள்களை உடனுக்குடன் பயன்படுத்தித் தீர்க்கலாம். வீடுகளின் அருகில் கால்நடைகள், விலங்குகள் இருந்தால் மீதமாகும் உணவை அவற்றுக்குக் கொடுக்கலாம்.
உணவுப் பொருள்கள் தொடர்ந்து வீணாகும்பட்சத்தில் எவையெல்லாம் தொடர்ந்து வீணாகின்றன என்பதை பட்டியல் எடுக்கலாம். அதை வைத்து, எந்த உணவு அடிக்கடி வீணாகிறது என்ற தெளிவு கிடைக்கும். அடுத்தமுறை அது வீணாவதைத் தடுக்கலாம்.
கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்ற காய்கறிகள் இலைகளுடன் கிடைத்தால் அவற்றை வீணாக்காமல் கீரைகளைச் சமைப்பதுபோல அவற்றையும் பொரியலாகவோ கூட்டாகவோ செய்து சாப்பிடலாம். சாலட், சூப் போன்ற உணவுகளிலும் பயன்படுத்தலாம்.
முளைவிட்ட வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையலுக்கு பயன்படுத்தியது போக மீதமாகும் கீரைத் தண்டுகளை, வேர்களுடன் இருந்தால் மீண்டும் தொட்டிகளில் நட்டு வைத்து வளர்க்கலாம்.
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களுக்கு துர்நாற்றத்தை கிரகிக்கும் ஆற்றல் உண்டு. பயன்பாட்டுக்குப் பிறகு அவற்றின் தோல்களைப் பயன்படுத்தி இயற்கையான ரூம் ஃப்ரெஷ்னர் தயாரிக்கலாம். நமக்குப் பிடித்த ஃப்ளேவரில், பிடித்த மணமூட்டிகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். இதுபற்றிய DIY (டூட் இட் யூவர்செல்ஃப்) வீடியோக்கள் இணையத்தில் ஏராளம் இருக்கின்றன.
முன்பெல்லாம் வீட்டு வளாகத்தின் ஓர் ஓரத்தில் குழிவெட்டி வீணாகும் உணவுக் கழிவுகளை அதில் கொட்டி உரமாக்குவார்கள். அப்பார்ட்மென்ட்டில் வசிப்பவர்களும் இதற்கென்று கிடைக்கும் பானைகளை வாங்கி உணவுக்கழிவுகளை உரமாக மாற்றலாம்.
மீந்துபோன சாதத்தில் வடாம், அதிகமான விளைச்சலின்போது கிடைக்கும் காய்கறிகளைக் காய வைத்து வற்றல் போடுவது என நம் முன்னோர்களிடம் உணவு வீணா வதைத் தவிர்க்கும் பழக்கம் இருந்தது. நேரமும், இடமும் இருந்தால் மற்றவர்களும் அதைப் பின்பற்றலாம்.
இட்லி, சப்பாத்தி போன்றவை மீந்துவிட்டால் சில்லி இட்லி, இட்லி உப்புமா, கொத்து சப்பாத்தி என வேறு வகையாக மாற்றி வீட்டிலுள்ளவர்களுக்குப் பரிமாற லாம். பதப்படுத்த முடிந்த உணவுகளை முறையாகப் பதப்படுத்தி, பின்னர் பயன்படுத்தலாம்.
உணவு வீணாவதைத் தடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சரியான திட்டமிடலும் சிறிய மெனக்கெடலும் இருந்தால் இதைச் சிறப்பாகச் செய்ய முடியும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: கூட்டணிக்காக இரண்டு சூரியன்களை இழந்த ஸ்டாலின்
டார்ச் லைட் பேட்டரிய கழட்டியாச்சு : அப்டேட் குமாரு
மஞ்சுமெல் பாய்ஸ் விமர்சனம் : ஜெயமோகனுக்கு கேள்வி எழுப்பிய வன்னியரசு
கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யமும் கடந்து வந்த பாதை!