ரூ.3,000 உதவித்தொகையுடன் தமிழ் சுவடியியல் டிப்ளமோ படிப்பு: எப்படி விண்ணப்பிப்பது?

Published On:

| By Raj

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், ரூ.3,000 மாதாந்திர உதவித்தொகையுடன்
தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.
வகுப்புகள் வாரத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் படிப்பில் சேர
ஆர்வமுள்ளவர்கள் எப்படி விண்ணப்பிப்பது என்கிற விவரமும் வெளியாகியுள்ளது.

தமிழ்ச் சுவடியியல் என்பது தமிழ் சுவடிகளின் உள்ளடக்கத்தை, உருவாக்கத்தை,
பராமரிப்பை, வரலாற்றை ஆயும் இயல் ஆகும். தமிழ்ச் சுவடிகளைக்
கண்டுபிடித்தல், பட்டியலிடுதல், பேணுதல், வாசித்தல், விளக்குதல்,
மொழிபெயர்த்தல் உட்பட்ட செயற்பாடுகள் இந்தத் துறையில் அடங்கும்.

இது தமிழ் தொல்லியல் துறையின் ஒரு துணைப் பிரிவாகும். தமிழ்ப் பல்கலைக்கழகம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஆசியவியல் நிறுவனம் ஆகியன தமிழ்ச்
சுவடியியல் தொடர்பான கல்வியினை வழங்குகின்றன.

இந்திய தேசியக் கலை மற்றும் பாரம்பரியப் பொருட்கள் பாதுகாப்பு மையத்தின்
மூலம் சுவடிகள் 1995-ம் ஆண்டு கணக்கெடுக்கும் பணி செய்யப்பட்டது. இதுவரை
இந்தியாவில் 31.5 லட்சம் சுவடிகளுக்கு மேல் இருப்பது அறிய முடிகிறது.
மேலும் சுமார் 1,50,000 சுவடிகள் ஆசியக் கண்டத்திலும் 60,000 சுவடிகள்
ஐரோப்பிய நாடுகளும் பாதுகாக்கப்படுகின்றன. Diploma in Tamil Manuscript Course

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் இதுவரை பலநூறு ஓலைச்சுவடிகள் களப்பணி
வாயிலாகக் கண்டெடுக்கப்பட்டு நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள
ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பாதுகாக்கப்பட்டு வரும் ஓலைச்சுவடிகளை அறிந்து தெரிந்து கொண்டு நூலாக்கம்
செய்யும் வகையில், தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டுப்
பட்டயப் படிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2013-ம் ஆண்டு முதல்
தொடங்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. Diploma in Tamil Manuscript Course

இந்தப் பட்டயப் படிப்பினை ஆர்வத்தோடு பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும்
வகையில் தேர்வின் அடிப்படையில் ஆண்டுதோறும் 10 மாணவர்களுக்கு மாதந்தோறும்
ரூ.3,000 வீதம் உதவித் தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 2025 – 26-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது
தொடங்கியுள்ளது. இந்தப் பட்டயப் படிப்பில் சேர குறைந்தபட்சம் 10-ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதார்களுக்கு வயது வரம்பு
கிடையாது. இந்தப் பட்டயப் படிப்புக்கான சேர்க்கைக் கட்டணம் ரூ.3,200
(அடையாள அட்டை உள்பட) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டயப்
படிப்புக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று
நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். வாரந்தோறும் திங்கள்,
செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் 4.15 மணி வரை
வகுப்பு நடைபெறும். Diploma in Tamil Manuscript Course

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பத்தினை https://ulakaththamizh.in/ என்ற
இணையதளப் பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரிலும்
பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம். இந்தப் பட்டயப் படிப்பிற்கு
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை
07.04.2025 என்ற தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் கல்விக் கட்டணம் செலுத்தியதற்கான வங்கி
வரைவோலையுடன் (Director, International Institute of Tamil Studies என்ற
பெயரில் எடுக்கப்படுதல் வேண்டும்) நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ
இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ்
(சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து அனுப்ப விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான எழுத்துத் தேர்வு 11.04.2025 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்
முற்பகல் 11 மணிக்கு நடைபெறும். 2026 மார்ச் மாதம் இறுதித் தேர்வு
நடைபெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஆய்வேடு
சமர்ப்பிப்பவர்களுக்கு மட்டுமே பட்டயச் சான்று வழங்கப்படும்.

இந்தப் படிப்பு குறித்து மேலும் விவரங்கள் அறிய இயக்குநர், உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப்
பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600113 (தொலைபேசி-044-22542992, கைப்பேசி:
96000 21709) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். Diploma in Tamil Manuscript Course

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share