சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாவம், புன்ணியம், மறுஜென்மம் என்றெல்லாம் பேசிய மகாவிஷ்ணு விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது.
இதன் அடிப்படையில் அப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி திருவள்ளூருக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி முழுதும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளியில் முகாமிட்டுள்ளார்கள்.
இதுகுறித்து பள்ளி வட்டாரங்களில் பேசியபோது, “ஆகஸ்ட் 28 ஆம் தேதி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பெற்றோர்களான காமாட்சி உள்ளிட்ட சிலர்தான், மகாவிஷ்ணு என்ற ஒரு பேச்சாளர் இருக்கிறார். அவரை அழைத்து வந்து மாணவிகளுக்கு மோட்டிவேட் செய்யும் விதமாக பேச வைக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
தலைமை ஆசிரியரும் இதுபற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திடம் தன்னம்பிக்கை பேச்சு நிகழ்ச்சி நடத்துகிறோம் என்று கேட்டு அனுமதி பெற்றார். செப்டம்பர் 28 ஆம் தேதி நிகழ்ச்சி வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.
அதன்படி அன்று பள்ளிக்கு வந்த மகா விஷ்ணுவுக்கு பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அப்போது தலைமை ஆசிரியர் தனது அறையில் அமர வைத்து மகாவிஷ்ணுவிடம் பேசியுள்ளார்.
அப்போது, ‘நான் என்ன பேசணும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க? ஏன்னா நானே பேசினா என்ன வேணும்னாலும் பேசிடுவேன்’ என்று மகாவிஷ்ணு கேட்டுள்ளார்.
அதற்கு தலைமை ஆசிரியர் தமிழரசி, ‘எங்கள் பிள்ளைகளுக்கு இந்த ஏஜில் அவர்களுக்கு ஏற்ற வகையில், அவங்களோட எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் பேசணும்’ என்று சொல்லியிருக்கிறார்.
இப்போது தலைமை ஆசிரியை மாற்றப்பட்டதும் தலைமை ஆசிரியை அறையில் நடந்த இந்த உரையாடல் வீடியோவை ஆசிரியர்களே வெளியிட்டு வருகிறார்கள்.
என்ன ஏதென்று முழுதாக விசாரிக்காமல் ஊடகங்களில் செய்தி வந்தவுடனேயே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றும் ஆசிரியர்கள் மத்தியில் பேச்சாக இருக்கிறது.
மேலும் இதுகுறித்து நம்மிடம் பேசிய சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள், “மாணவர்களிடத்தில் அந்த மகாவிஷ்ணு மறு ஜென்மம் பற்றியெல்லாம் பேசியது சரியல்லதான். ஆனால், அதற்காக எடுத்த எடுப்பிலேயே தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்திருக்கிறது அரசு. ஏற்கனவே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் நலனில் ஈடுபாடு காட்டுவதில்லை என்று பொது சமூகத்தில் ஒரு கருத்து இருக்கிறது.
ஆனால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ரிசல்ட்டை காட்டுவதிலும் மாணவர்களை பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயார் படுத்துவதிலும் பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக ஈடுபட்டுள்ளார்கள். அந்த வகையில்தான் தலைமை ஆசிரியர் தமிழரசியும் பொது தேர்வு எழுத இருக்கும் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் திட்டத்தோடுதான் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் விசாரணையே செய்யாமல் நடவடிக்கை எடுத்திருப்பது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
திருக்குறளை பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்க போகிறார்களா? : உமா ஆனந்த் கேள்வி!
அன்று நடிகர் தாமு… இன்று மகா விஷ்ணு… மாணவர்களை அழ வைக்கும் மோட்டிவேஷன் ஸ்பீக்கர்ஸ்!