வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் எத்தனை குடும்பங்களுக்கு அரசு உதவி கிடைத்துள்ளது என தமிழக அரசு அறிக்கை அளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
வாடிப்பட்டி பொட்டுலுபட்டியைச் சேர்ந்த தனபால் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு விதிகள்படி கொலை, மரணம், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 3 மாதத்தில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை, பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி, மூன்று மாதங்களுக்கு வீட்டுக்கு தேவையான அரசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பத்தினருக்கு இந்த சட்டப்படி நிவாரணம் வழங்கப்படவில்லை.
எனவே, தமிழகத்தில் 2001 முதல் 2017 வரை வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, கொலை வழக்கு பதியப்பட்ட வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் விதிகளின் அடிப்படையில் விவசாய நிலம்,வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வில் இன்று (செப்டம்பர் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இதுவரை தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கொலை வழக்குகளாக பதியப்பட்ட வழக்குகளில் எத்தனை குடும்பத்தினருக்கு விவசாய நிலம், அரசு வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
கலை.ரா
மது விற்பனைக்கு தடை? உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!