நீட் தேர்வால் உயிரிழந்த ஜெகதீஸ்வரனின் நண்பன் ஃபயாஸ்தின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இன்று நீட் தேர்வு ரத்து குறித்து நேருக்கு நேராக கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவன் ஜெகதீஸ்வரன் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 12) தற்கொலை செய்து கொண்டார். மகன் தற்கொலை செய்து கொண்ட துயரம் தாங்காமல் அவரது தந்தை செல்வ சேகரும் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
செல்வ குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்று விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வால் மாணவர் அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனை அளிக்கக்கூடியது. மாணவர்கள் எந்த தவறான முடிவும் எடுக்கக்கூடாது. நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக சட்டப்போராட்டம் நடத்தும்.
நீட் தேர்வில் மக்களின் மனநிலை தெரியாமல் ஆளுநர் அவருக்கென்று தனி மனநிலையில் பேசுகிறார். மாணவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். முதலமைச்சர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்” என்று பேசினார்.
பின்னர் அமைச்சர் உதயநிதி புறப்படுவதற்காக காரை நோக்கி சென்ற போது, ஜெகதீஸ்வரனின் நண்பன் ஃபயாஸ்தின், “மத்திய அரசை எதிர்த்து நம்மால் ஒன்னும் பண்ணமுடியாதா? இன்னும் எத்தனை ஜெகதீஸை நாம் இழக்கப் போகிறோம். எதாவது பண்ணமுடியுமா?
அவன் (ஜெகதீஸ்வரன்) மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்று நினைத்தான். எத்தனை மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். இன்னும் எத்தனை ஜெகதீஸை, எத்தனை அனிதாவை நாங்க இழக்கணும். ஒவ்வொரு முறையும் இதே கோரிக்கை தான்.
பன்னிரண்டாவது முடித்துவிட்டு நீட், ஜேஇஇ-னு எத்தன எண்ட்ரன்ஸ் தான் எழுதணும். அப்பறம் எதுக்கு பன்னிரண்டாவது படிக்கறோம்னே தெரியல.
நா எம்பிபிஎஸ் சேர்ந்துட்டேன்… என் ஃபரண்டால முடியல. என் கிட்ட பணம் இருக்கு நான் சேர்ந்துட்டேன்… என ஃப்ரண்ட் கிட்ட பணம் இல்ல.
அவனால் எம்பிபிஎஸ் சேர முடியல. ஆருநருக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை” என்று ஆவேசமாகப் பேசினார்.
இதனை கேட்டபடியே சென்ற அமைச்சர் உதயநிதி, ’நடவடிக்க எடுப்போம்’ என்று கூறிக் கொண்டே காரில் ஏறி சென்றார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்போம். அந்த ரகசியங்கள் எங்களிடம் உள்ளது என்று உதயநிதி வாக்குறுதி அளித்த நிலையில் மாணவர் ஃபயாஸ்தின் அமைச்சர் உதயநிதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
ஜெகதீஸ்வரன் தற்கொலை எதிரொலி: ஆளுநரின் விருந்தை புறக்கணிக்கும் திமுக
பாஜக பேரணி: காவல்துறை அனுமதி மறுப்பு!