கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கிறீர்கள்?

Published On:

| By Minnambalam

ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிப்பீர்கள் என்று கேட்டால் பலர் மூன்று, நான்கு எனச் சொல்கிறார்கள். சிலர் எப்போது நினைக்கிறேனோ அப்போதெல்லாம் குடிப்பேன் என்கிறார்கள்.

ஆனால், அளவு எவ்வளவு என்று குறிப்பிடுவதில்லை. அதிக காபி, டீ குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் உள்ள நிலையில்  ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்?

“காபியோ, டீயோ…. ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். ஒரு கப் என்பது 100 முதல் 150 மில்லி வரை இருக்கலாம். அப்படி அளந்து குடிப்பது சிறந்தது.

சிலர் பெரிய மக் நிறைய காபியோ, டீயோ குடிப்பார்கள். அந்தப் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. கஃபைன் கலந்த பானங்களைக் குடிப்பதில் சில சாதகங்களும் உள்ளன, பாதகங்களும் உள்ளன.

தவிர ஒவ்வொரு முறை நீங்கள் குடிக்கும் காபி, டீயில் சேரும் சர்க்கரையும் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.

உதாரணத்துக்கு, முறையாக வொர்க் அவுட் செய்யும் பழக்கமுள்ள நபர்கள், வொர்க் அவுட்டுக்கு முன் பால் சேர்க்காத பிளாக் காபி குடிப்பது நல்லது. அது வொர்க் அவுட்டுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கும்.

அதுவே களைப்பு, படபடப்பு போன்றவை உள்ளவர்கள் கஃபைன் அளவைக் குறைக்க வேண்டியது மிக முக்கியம்.

ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து கப்புக்கும் அதிகமாக காபி, டீ குடிக்கும்போது நம் உடலில் நீர்ச்சத்து வறண்டு போகும். சிலருக்கு இதனால் பற்கள் கறையாகலாம்.

வேறு சிலருக்கு செரிமானம் தொடர்பான தொந்தரவுகள் வரலாம்.

காபி குடித்த அடுத்த பத்து நிமிடங்களில் வயிறு வலிப்பதாக சிலர் உணர்வார்கள். இது தொடர்ந்தால் அவர்களுக்கு பால் அல்லது கஃபைன் ஏற்றுக் கொள்ளவில்லை என அர்த்தம். எனவே அதைத் தவிர்ப்பது நல்லது.

அதிக அளவில் காபி, டீ குடிப்பவர்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். காபியில் உள்ள டானின், உடலில் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைத் தடுத்து ஹீமோகுளோபின் குறைபாட்டுக்கு காரணமாகும்.

குறிப்பாக பெண்களுக்கு பொதுவாகவே ரத்தச்சோகை பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால் அவர்கள் காபி, டீயின் அளவைக் குறைப்பது அல்லது அறவே தவிர்ப்பது அவசியமாகும்.

செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்கள், பால் தவிர்த்து பிளாக் காபி, பிளாக் டீ எடுத்துக்கொள்ளலாம்”  என்கிறார்கள் டயட்டீஷியன்கள்.

சாமை – பச்சைப்பயறு – நல்லெண்ணெய் சாதம்!

கிச்சன் கீர்த்தனா : பனிவரகு – மஷ்ரூம் – டொமேட்டோ சூப்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel