நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவரது மனைவி லதா கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
அவர் வழக்கம்போல் நேற்று படப்பிடிப்பில் கலந்துகொண்ட நிலையில், திடீரென அடிவயிறு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (செப்டம்பர் 30) மதியம் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் விசாரித்த போது அவரது கிட்னி பகுதியில் சதை வளர்ந்திருப்பதாகவும், இன்று காலை 6 மணி முதல் மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ரஜினியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், கவலைப்படும்படி எதுவும் இல்லை என அவரது மனைவி லதா செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த செய்தி ரஜினியின் உடல்நிலை குறித்து கவலையடைந்த அவரது ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அப்போலோ மருத்துவமனை சார்பில் ரஜினியின் உடல்நிலை குறித்து இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 நியூஸ் : ஜம்மு காஷ்மீர் தேர்தல் முதல் இந்தியா – வங்கதேசம் இறுதி நாள் ஆட்டம் வரை!
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி… மோடிக்கு அண்ணாமலை கடிதம்!